மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்; தைவானை வீழ்த்தி சாதனை
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டிகள் டாக்கா நகரில் நடந்து வந்தன. இதில், 11 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் இந்திய மகளிர், தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டா அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து அரை இறுதிப் போட்டியிலும் ஈரான் அணியை அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், நேற்று பிற்பகல் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - தைவான் அணிகள் மோதின. இதில், சிறப்பாக ஆடிய இந்திய அணி, 35-28 என்ற புள்ளிக் கணக்கில் மகத்தான வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சர்வதேச கபடி போட்டிகளில் இந்திய மகளிர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டிகளில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டிகளில் நடந்த கபடி போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.