இன்னும் கூடுதலான மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: இன்னும் கூடுதலான மகளிருக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மாங்காடு நகர திமுக செயலாளரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான ஜபருல்லாவின் மகள் சனோபர் பசீலா-அப்துல் மாலிக் சல்மான் ஆகியோரின் திருமணத்தை நேற்று நடத்தி வைத்தார். திருமணவிழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தலைவர் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான ‘விடியல் பேருந்து பயண திட்டத்திற்கான அந்த கையெழுத்துதான். இந்த திட்டத்தின் மூலம் இந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 800 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு மகளிரும் மாதம் 1,000 ரூபாய் சேமித்து இருக்கின்றார்கள். அடுத்து முதல்வருடைய காலை உணவுத் திட்டம்.
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றார்கள். இந்த திட்டத்தை, சமீபத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நம்முடைய முதல்வர் மாணவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, பெற்றோர்கள், ஆசிரியர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த திட்டத்தை விரிவுபடுத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், பேசும்போது, இது மிக, மிக சிறப்பான ஒரு திட்டம். இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை பாலோ செய்ய வேண்டும். நான் எங்களுடைய பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகின்றேன்\\” என்று பெருமையுடன் சொன்னார். இப்படி மற்ற முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய முதல்வர்.
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய மாநிலம்தான் நம்முடைய மாநிலம் தமிழ்நாடு. இது எல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியமான ஒரு திட்டம். உங்கெளுக்கெல்லாம் தெரிந்த திட்டம்தான். அதுதான் கலைஞர் மகளிர் உரிமை தொகைத்திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்த செப்டம்பர் மாதத்தோடு 2 வருடங்கள் நிறைவு பெறுகின்றது. கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய்னு 2 வருடத்தில நம்முடைய முதல்வர் 24,000 ரூபாய் கொடுத்திருக்கின்றார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கூட நிறைய பேர் மனு கொடுத்து இருக்கின்றார்கள். நிச்சயமாக நம்முடைய முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அந்த மனுக்கள் மீது நிச்சயம் நல்ல முடிவை எடுத்து, இன்னும் கூடுதலான மகளிருக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை உங்கள் முன் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.