மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜிடம் 2.30 மணி நேரம் விசாரணை: ஜாய் கிரிசில்டாவும் வாக்குமூலம்
சென்னை: ஜாய் கிரிசில்டா புகாரின் மீது விசாரணைக்காக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் 2.30 மணி நேரம் விசாரணை நடந்தது. மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி தொடர்பாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ”ரங்கராஜ் என்பவர் எனது கணவர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த இரு ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். ஆனால், கடந்த இரு மாதங்களாக எனது தொடர்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்ற போது என்னை அடித்து விரட்டினார்.
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஆணைய தலைவர் குமாரி முன்பு தனது மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்காக அவரது வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியத்துடன் நேற்று ஆஜரானார். அதே போல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜனார். இருவரும் தனித்தனியாக சுமார் 2.30 மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணையை ஆணைய தலைவி வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.