மகளிர் உலகக் கோப்பையில் இன்று: செமி பைனலுக்குள் நுழைய இந்தியா-நியூசி மல்லுக்கட்டு
நவிமும்பை: மகளிர் உலகக் கோப்பைக்காக இந்தியா இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3ல் தொடர் தோல்விகளை தழுவியதால், 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அடுத்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து மகளிர் அணியுடன் இந்திய மகளிர் அணி, நவிமும்பையில் இன்று நடக்கும் ஒரு நாள் போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியில், முந்தைய போட்டிகளை போல் இந்தியா சொதப்பினால், அரை இறுதி வாய்ப்பு கானல் நீராகும்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு திறன் மற்றும் சேசிங்கில் உள்ள குறைபாடுகள் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தன. அதைத் தொடர்ந்து, இங்கிலாந்துடன் நடந்த கடைசி போட்டியில், கையில் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க 54 பந்துகளில் 56 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அதை எடுக்க முடியாமல், 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்படாதது பெரிய குறையாக உள்ளது.
அதேபோல், பந்து வீச்சாளர்களும் சொதப்பி வருகின்றனர். இன்றைய போட்டியில் தங்கள் தவறை திருத்திக் கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம் ஆகும். விதிவிலக்காக, ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. நியூசிலாந்து தரப்பில் சோபி டிவைன், சூஸி பேட்ஸ் வலுவான போட்டியை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசி. கடைசியாக இலங்கையில் ஆடிய இரு போட்டிகளும் மழையால் அடித்து செல்லப்பட்டதால், இன்று முழுமையான போட்டியை ஆடும் நம்பிக்கையில் உள்ளது.
இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள்
இந்தியா: ஹர்மன்பிரித் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், அமன்ஜோத் கவுர், ஸ்நேஹ் ரானா, தீப்தி சர்மா, கிரந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், சரணி, ராதா யாதவ், உமா செத்ரி.
நியூசிலாந்து: சோபி டிவைன் (கேப்டன்), இசபெல்லா கேஸ் (விக்கெட் கீப்பர்), மேடி கிரீன், பாலி இங்லீஸ் (விக்கெட் கீப்பர்), பெல்லா ஜேம்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், சூஸி பேட்ஸ், புரூக் ஹேலிடே, அமெலியா கெர், ஈடன் கார்சன், பிரி இல்லிங், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மேர், ஹனா ரோவ், லியா டஹுஹு.