மகளிர் உலகக் கோப்பை ஓடிஐ முதல் போட்டியில் இந்தியா வெற்றி: அமன்ஜோத், தீப்தி அரை சதம்
கவுகாத்தி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் போட்டி, கவுகாத்தியில் நேற்று நடந்தது. அதில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனை மந்தனா, 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால், 47 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. அதன் பின் வந்து பொறுப்புடன் விளையாடிய பிரதிகா 37 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 48 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஜெமீமா ரோட்ரிகஸ் 0, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21, ரிச்சா கோஷ் 2 ரன் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர் 99 பந்துகளில் 103 ரன் குவித்த நிலையில், அமன்ஜோத் 57 ரன் ஆட்டமிழந்தார்.
தீப்தி சர்மா 53 ரன்னில் அவுட்டானார். 47 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன் குவித்தது. இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 4, உதேசிகா பிரபோதனி 2 விக்கெட் வீழ்த்தினர். 270 ரன் வெற்றி இலக்குடன் இலங்கை மகளிர் களமிறங்கினர். இதில் கேப்டன் சாமரி அட்டப்பட்டு 43 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 35 ரன்னும், ஹர்ஷிதா சமரவிக்ரம 29 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் தீப்தி சர்மா 3, ஸ்நேகா ரானா மற்றும் சாரனி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.