மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் 6வது போட்டி கொழும்பு நகரில் நேற்று, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்தது. டாஸ் போட்டபோது, பாக். அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
தவிர, இரு தரப்பு கேப்டன்களும் கைகுலுக்காமல் ஆட்டத்தை தொடங்கினர். முதலில் களமிறங்கிய இந்திய அணி துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த நிலையில், மந்தனா (23 ரன்) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் பிரதிகா 31 ரன்னில் வீழ்ந்தார். அதன்பின், 3வது விக்கெட்டாக கேப்டன் ஹர்மன்பிரீத் (19 ரன்) அவுட்டானார்.
பின்னர், ஹர்லீன் 46, ஜெமிமா ரோட்ரிகஸ் 32, ஸ்நேஹ் ராணா 20, தீப்தி சர்மா 25, ஸ்ரீசரணி 1 ரன்னில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 50வது ஓவரை வீசிய டயானா பெய்க், கடைசி இரு பந்துகளில் கிரந்தி கவுட் (8 ரன்), ரேணுகா சிங் (0) ஆகியோரை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
அதனால், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாக்.கின் டயானா பெய்க் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, களம் இறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.