மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அபார வெற்றி
கவுகாத்தி: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் 8வது போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. அதில் வங்கதேசம் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேச துவக்க வீராங்கனை ரூபியா ஹைதர் 4 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஷர்மின் அக்தர் 30, பின் வந்தோரில் ஷோபனா மோஸ்தாரி 60, ரபேயா கான் ஆட்டமிழக்காமல் 43 ரன் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால், வங்கதேசம், 49.4 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அதன் பின், 179 ரன் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் டேமி பியுமான்ட் 13, அமி ஜோன்ஸ் 1 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தனர். பின் வந்த ஹீதர் நைட் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால், கேப்டன் நாட் சிவர்பிரன்ட் 32, சோபியா டங்க்லீ 0, எம்மா லாம்ப் 1, ஆலீஸ் கேப்சி 20 ரன்னில் விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து தடுமாறியது. இருப்பினும், ஹீதர் நைட் (79), சார்லீ டீன் (27) இணை சேர்ந்து ரன்களை குவித்தனர். அதனால், 46.1 ஓவரில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து வெற்றி பெற்றது.