மகளிர் உலகக்கோப்பை தென் ஆப்ரிக்காவை தெறிக்க விட்ட இங்கி: 10 விக்கெட் வித்தியாச வெற்றி
கவுகாத்தி: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் நேற்று, தென் ஆப்ரிக்கா அணியை, இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. கவுகாத்தியில் நேற்று மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 4வது போட்டி நடந்தது. அதில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா அணியினர், இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்தனர்.
20.4 ஓவர்களை மட்டுமே ஆடிய அவர்கள், 69 ரன்களுக்குள் சரண்டர் ஆகினர். இங்கிலாந்து தரப்பில் லின்சி ஸ்மித் 3, நாட் சிவர்பிரன்ட், சோபி எக்லஸ்டோன், சார்லீ டீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன் பின், 70 ரன் இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் டேமி பியுமான்ட், அமிஜோன்ஸ் களமிறங்கினர்.
பேட்டிங்கிலும் அதகளம் காட்டிய அவர்கள் 14.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு, விக்கெட் இழப்பின்றி 73 ரன் குவித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தனர். டேமி 21, அமி 40 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியின் லின்சி, வெறும் 7 ரன் மட்டுமே தந்து 3 விக்கெட் வீழ்த்தியதால் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.