மகளிர் உலகக்கோப்பை செஸ் வரலாற்றில் முதல்முறையாக பைனலில் இந்திய வீராங்கனைகள்; பட்டத்துக்கு திவ்யா, ஹம்பி பலப்பரீட்சை
பதுமி: மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடர் பைனலில் இந்திய வீராங்கனைகள் திவ்யா, ஹம்பி ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். மகளிர் உலக்கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஒரு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் 19 வயது வீராங்கனை திவ்யா தேஷ்முக், முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்யியை சந்தித்தார்.
இந்த போட்டி டிராவில் முடிந்ததால் டை பிரேக்கர் போட்டியில் மோதினார். இதில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று ஜோங்யியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மகளிர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா தேஷ்முக் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2026ம் ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டியின் 75வது நகர்வில் டிராவில் முடிந்தது. இருவரும் தலா ஒரு புள்ளிகள் எடுத்திருந்ததால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் சுற்று நேற்று நடந்தது. 8 ஆட்டங்களில் 5-3 என்ற கணக்கில் டிங்ஜியை வீழ்த்தி ஹம்பி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றி மூலம் 2026ம் ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றார். இறுதிப் போட்டி ஜூலை 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்கும். தேவைப்பட்டால் ஜூலை 28ம் தேதி டைபிரேக்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக இறுதி போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள் மோத உள்ளதால், முதல்முறை உலகக்கோப்பை கிடைப்பது உறுதியாகி உள்ளது.