பெண்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
அம்பிகாபூர்: பெண்கள் சமூகத்தின் அடித்தளம் என்றும் அவர்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தின் அம்பிகாபூரில் நடந்த பிர்சா முண்டாவின் பிறந்த நாளான, ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது பேசிய குடியரசு தலைவர், ‘‘சட்டீஸ்கர் மற்றும் நாடு முழுவதும் இடதுசாரி தீவிரவாதத்தின்பாதையை மக்கள் (நக்சலைட்டுக்கள்) கைவிட்டு வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பது சாத்தியமாகும். இந்த இலக்கை அடைவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த முயற்சிகள் மிகவும் திருப்திகரமான மாற்றமாகும். பழங்குடியினத்தை சேர்ந்த வீரர்களின் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலமாக சட்டீஸ்கரை சேர்ந்தவர்கள் வலுவான தன்னம்பிக்கை கொண்ட மற்றும் விக்சித் பாரத்தை உருவாக்குவதற்கான விலைமதிப்பற்ற பங்களிப்பை செய்வார்கள் என்று நம்புகிறேன். பெண்கள் சமூகத்தின் அடித்தளம். அவர்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறுகிறது” என்றார்.