மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல 100 கிமீ வரை பேருந்து கட்டணம் இல்லை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சேலம்: மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல 100 கிமீ வரை பேருந்து கட்டணம் இல்லை என சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மேயர் ராமச்சந்திரன், எம்பிக்கள் சேலம் டி.எம்.செல்வகணபதி, ஈரோடு பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள 43,215 சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 4.25 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக்கடன் இணைப்புகளை வழங்கினார்.
மேலும், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு லட்சம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது: கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தபோது, ஒரு சகோதரி மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த எங்களுக்கு அடையாள அட்டை வேண்டும், என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்ததையடுத்து, உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார்.
மேலும், மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். திருவாரூரில் வைக்கப்பட்ட கோரிக்கை, இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி மகளிர் சுய உதவிக்குழுவின் தயாரிப்புகளை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம். இதனால் உங்களுக்கு லக்கேஜ் சார்ஜ் மிச்சமாகி, லாபமும் அதிகமாகும்.
மேலும், அடையாள அட்டை மூலமாக ஆவின், கோ-ஆப்டெக்ஸ், முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல இடங்களில் சலுகைகள் உண்டு. இதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி 2 ஆண்டுகளாக 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 40% மனுக்கள், மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
முதலமைச்சர் சில விதிமுறைகளை தளர்த்தி உள்ளார். ஓரிரு மாதங்களில் கூடுதலாக, தகுதிவாய்ந்த மகளிருக்கும் உரிமைத்ெதாகை வழங்கப்படும். எனவே, திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர, 2026ல் நமது அரசை அமைக்க மகளிர் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விழா மேடை அருகே மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, சேலத்தில் பேமஸாக கூறப்படும் தட்டு வடை சசெட் ஒன்றை வாங்கி சாப்பிட்டு அருகில் இருந்தவர்களுக்கும் வழங்கினார். மகளிர் சுயஉதவிக்குழுவினர் அவருக்கு திருவள்ளுவர் சிலை, சிறுதானிய வரைபடம் ஆகியவற்றை பரிசாக வழங்கினர்.
* விடியல் பஸ்தான் வெற்றி பெறும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தற்போது ஒவ்வொருத்தர், பச்சை, மஞ்சள் என ஒவ்வொரு கலர் பஸ்களை எடுத்துக் கொண்டு போய் வருகின்றனர். ஆனால் கடைசியாக அனைத்தையும் ஓவர்டேக் செய்து வெற்றி பெறப்போவது, முதல்வரின் விடியல் பயண திட்டத்தின் பிங்க் பஸ் தான்.
* திமுக அரசை போட்டி போட்டு பாராட்டிய பாமக எம்எல்ஏக்கள்
கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக எம்எல்ஏக்கள் அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் பேசும்போது, மாற்று கட்சியாக இருந்தாலும் எங்களை அழைத்து விழா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக, போட்டி போட்டு அரசை பாராட்டினர். குறிப்பாக, மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்ய சதாசிவமும், மேற்கு தொகுதிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்ய அருளும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘விழாவில் பேசிய 2 எம்எல்ஏக்கள் அரசை பாராட்டினர். அவர்கள் நம்முடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. கூட்டணி கட்சி கூட இப்போது கிடையாது. சேலம் மாவட்டத்திற்கு இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என நன்றி கூறி, போட்டி போட்டுக் கொண்டு பாராட்டினர். அவர்கள் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். எப்போதும் இதே ஒற்றுமையோடு இருந்து, அவர்கள் சிறப்பான மக்கள் பணியாற்ற வேண்டும், என உங்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்,’’ என்றார்.