பெண்கள் சிறகில்லா பட்டாம்பூச்சிகள்!
1920 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியலமைப்பின் 19வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் நாளைத்தான் ஆண்டுதோறும் நாம் பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடுகிறோம். இந்நாளில்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இந்த நாள் பெண்களின் முன்னேற்றம், கல்வி, வேலை மற்றும் சம ஊதியம் போன்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களின் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ‘‘சிறகில்லா வண்ணத்துப்பூச்சிகள்தான் பெண்கள். இருக்கும் இடத்தின் சூழல் உணர்ந்து அங்கேயே நிற்பதா, இல்லை சட்டென பறப்பதா என எப்போதும் தயார்நிலையிலேயே இருக்கும் ஒரு உயிரினம் வண்ணத்துப்பூச்சி. அப்படித்தான் பெண். தன் சூழலுக்கு ஏற்ப தன்னை வளைத்துக்கொள்வாள். அதே சமயம் இருக்கும் இடம் தனக்கு ஆபத்து என்றால், அல்லது இது நமக்கான இடம் இல்லை என உணர்ந்தால் உடனுக்குடன் இடத்தை காலி செய்துவிடுவர். அப்படியான பெண்களை அவர்கள் இயல்பிலேயே இருக்க விடுங்க என்பதைச் சொல்ல ஒரு வாய்ப்பு வேணும் என நினைச்சேன். அதுதான் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம். பொறுப்புடன்பேசுகிறார் வி.கார்த்திக் குமார். இவர் இதற்கு முன்பு ‘சமானியன்’ படத்திற்கு கதை எழுதியவர்.
ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது யூடியூபில் டிரெண்டாகியிருக்கிறது இந்தப் பாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பெண்கள் சமத்துவ தினத்தை கொண்டாடும் விதமாக வெளியானது. வெளியாகி இதுவரை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. ‘‘ ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகதான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் ஆண்-பெண் சமநிலை பேசணும் என நினைச்சேன். ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அவளுக்கும் அவளைச் சார்ந்தவர்களுக்கும் அந்த வாழ்வை மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும். ஒட்டுமொத்த பெண்களின் இரண்டு விதமான வாழ்க்கை முறையைசொல்லணும்ன்னு நினைச்சேன். திருமணப்பந்தத்தில் இணைந்து தான் நினைத்த வாழ்க்கையில் வாழும் ஒரு பெண். இன்னொரு பெண் திருமண உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிலிருந்து விடுபட்ட பெண். இங்கே இரண்டுமே சரிதான். ஒரு வாழ்க்கையை வாழவும், பிடிக்காத வாழ்க்கைக்கு நோ சொல்லவும் ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை கலாச்சார சீரழிவு என்பது, இதுதான் நம் பாரம்பரியம் என்பது இப்படி ஏன் எல்லாத்தையும் பெண்கள் கிட்ட தேடுறீங்க, திணிக்கறீங்க இந்தக் கேள்வியை நான் கேட்க நினைச்சேன். அதுதான் இந்த ‘‘பட்டர்ஃபிளை’’. ஏன் ஆல்பம் பாடலாக யோசித்தீர்கள்? தொடர்ந்தார் கார்த்திக்.
‘‘பிரச்சாரம் மாதிரியோ, அறிவுரை மாதிரியோ இல்லாமல், வசனங்கள் பேசி இந்த விஷயத்தைப் புரிய வைக்காமல், உணர்வுகளால் புரிய வைக்க நினைச்சேன். அதனால்தான் ஆல்பம் பாடல். மேலும் ஆல்பம் பாடலிலும் கூட சமூகக் கருத்தை முன் வைக்க முடியும் என்கிற நோக்கம்தான். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழகாக மாற்றும் சக்தி பெண்ணுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உண்டு. இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக்கும் திறனும் பெண்ணுக்கு உண்டு. எப்படி பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டு அழகுப் பார்க்கணுமோ, அப்படி பெண்களை அவர்கள் விருப்பத்திற்கு விட்டுடணும். ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அந்த உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு. இந்தக் கான்செப்ட் கேட்டவுடன் காந்தாரா ஸ்டுடியோஸ் தயாரிக்கமுன் வந்தாங்க. சாந்தினி , ஷ்ரதா ராவ், ஷ்ரதா ராவின் கணவராக விஷ்ணு மூணு பேரும் தங்களுடைய நடிப்பாலும், உணர்வுகளாலும் பாடலுக்கு மேற்கொண்டு சிறப்பு சேர்த்திருக்காங்க. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மதியழகன் சார் நடிச்சிருக்கார். அவருக்கு நடிகர் பார்த்திபன் சார் பின்னணி குரல் கொடுத்தது இந்த பாட்டுக்கு இன்னொரு பலம்’’ பாடல் இசை மற்றும் வரிகள் பற்றி மேலும் தொடர்ந்தார் கார்த்திக். ‘‘இந்த பாடலை கவிஞர் மணி எழுத அச்சுராஜா மணி மியூசிக் செய்திருக்கார். அச்சுராஜா மணி மற்றும் அமலா சேர்ந்து பாடலை பாடியிருக்காங்க. பிராங்கிளின் ரிச்சர்ட் விஷுவல் செய்திருக்கார். ஒரு நாள் வாழ்க்கையானாலும் அதன் விருப்பப்படி வாழ ஒரு பட்டாம்பூச்சிக்கே உரிமை இருக்கும் போது ஆறறிவுள்ள பெண்ணுக்கு இல்லையா?’’ ஒட்டுமொத்த பெண்களின் குரலாகக் கேட்கிறார் வி. கார்த்திக் குமார்.
- ஷாலினி நியூட்டன்.