மகன், கணவரை இழுத்து சென்ற முதலைகள் சண்டையிட்டு காப்பாற்றிய வீரப்பெண்கள்
லக்னோ: உத்தரபிரதேசம், பீகாரில் நடந்த இரு சம்பவங்களில் மகன், கணவரை இழுத்து சென்ற முதலைகளுடன் சண்டையிட்டு தங்கள் குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பக்ரை மாவட்டம் கைரிகாட் பகுதியில் உள்ள தாகியா கிராமம் உள்ளது. இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்து கொண்டிருந்தான்.
திடீரென அவனது அலறல் சத்தம் கேட்டது. உடனே அருகில் நின்றிருந்த அவனது தாய் மாயா, ஓடி சென்று பார்த்தார். ஒரு ராட்சத முதலை, சிறுவனை தண்ணீருக்குள் இழுத்து செல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எதையும் யோசிக்காமல் அடுத்த விநாடியே ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். வீரப்பெண்மணியான அந்த தாய், மகனை இறுக்கமாக பிடித்து கொண்டு, மகனை கவ்வி கொண்டிருந்த முதலையின் தாடையை குறிவைத்து தன்னிடம் இருந்த சிறு கம்பியால் ஓங்கி தாக்கினார்.
இந்த பயங்கர தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை, பிடியை தளர்த்தி சிறுவனை விடுவித்தது. பின்னர் ஆழமான பகுதிக்குள் சென்று முதலை மறைந்தது. முதலை தாக்கியதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலையை பிடிக்க அந்த கால்வாயில், 3 இடங்களில் வலை விரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதேபோல பீகார் மாநிலம் மோதிபூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பெண், தனது கணவரை முதலையிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். அதாவது, மாதவபூர் கிராமத்தில் சைபு (45) என்பவர், தனது மனைவி சுர்ஜனா மற்றும் மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் திடீரென வந்த ஒரு முதலை சைபுவின் காலை கடித்து இழுத்தது. அலறி கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுர்ஜனா, தனது புடவையை தண்ணீரில் வீசி, கணவரை பிடித்து கொள்ள செய்தார்.
பின்னர் முதலையை தாக்கினார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து முதலையை கம்புகளால் தாக்கினர். இதனால் சைபுவை முதலை விட்டுவிட்டு தப்பியது. காயமடைந்த சைபு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்றும், அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.