தனியாக உட்கார்ந்து சாப்பிடும் பெண்...
எத்தனையோ துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியையும் சாதனைகளையும் பெண்கள் நிகழ்த்தி வருகிறார்கள். எவரெஸ்ட் உயரம் வரை தொட்டு தோரணை காட்டுகிறார்கள். ஆனால் இன்னமும் பெண்களுக்கு வசப்படாத சில துறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் தினம்தோறும் ஆண்கள் மிகச் சாதாரணமாக செய்யும் சில செயல்பாடுகளும் அடக்கம். அதில் ஒன்று உணவகங்களில் சென்று உணவு அருந்துவது. ஒரு ஆண் மிகச் சுலபமாக தனியாக அமர்ந்து சாப்பிடும் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்டுகளில் பெண்களை தனியாக அவ்வளவு சுலபமாக பார்த்துவிட முடியாது. ஒருவேளை ஒரு பெண் தனியாக சாப்பிட வந்தால் கூட சப்ளையர் உடனடியாக வந்து ஆர்டரை எடுக்கவும் மாட்டார். ஏன் இந்த நிலை தனியாக பயணிக்கும் பெண், உணவருந்தும் பெண் , சிங்கிள் வுமனாக வந்து சினிமா பார்க்கும் பெண் என இவர்களை சமூகம் ஒரு தயக்கமான நிலையிலேயே வைத்திருப்பது ஏன்? வித்தியாசமாக முதலில் பார்ப்பது ஏன்? பெண்களுக்கு இந்த தயக்கம் இருப்பது எதனால் என்ன சொல்கிறார்கள் பெண்களும், நிபுணர்களும்.
வைஷ்ணவி (கல்லூரி மாணவி) :
இதுவரையிலும் நான் தனியாக அமர்ந்து சாப்பிட்டதே கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ஃப்ரண்டை ஆவது கூட்டிட்டு போய் தான் சாப்பிடுவேன். என்னவோ தனியா உட்கார்ந்து சாப்பிட ஒரு மாதிரி இருக்கும். எல்லாரும் என்னையே பார்க்கற மாதிரி ஒரு உணர்வு. அப்படிப் பார்த்தா எப்படி சாப்பாடு இறங்கும். நான் வளர்ந்த சூழல் அப்படி. அதுவும் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து போறது கூட குறைவுதான். ஹோட்டல் என்றாலே அப்பா, அம்மா கூட தான் போறதுண்டு.
தர்ஷினி ராம் ( சூரியன் எஃப். எம் ஆர். ஜே, திருச்சி) :
நான் ஒரு சிங்கிள் வுமன். ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமா தான் இருந்துச்சு. தயக்கத்திலேயே சில சமயம் பசியை கூட அடக்கி இருக்கேன். ஆனால் இதுதான் நம்ம வாழ்க்கை அப்படின்னு ஆனதுக்கப்புறம் நம்ம வயித்துக்கு நாம சாப்பிட எதுக்கு தயங்கணும். இதோ இப்போ அடிக்கடி ஹோட்டலில் தனியா உட்கார்ந்து சாப்பிடுறேன். ஆனாலும் துவக்கத்தில் ஏற்பட்ட அந்த தயக்கம் ஏன் எதற்கு யார் கொடுத்த உணர்வு இதெல்லாம் தெரியலை. உண்மையாகவே வெயிட்டர் கூட அவ்வளவு சுலபமா பக்கத்தில் வந்து ஆர்டர் எடுக்க மாட்டார். ஆனால் இப்போ அந்த தயக்கம் மாறிடுச்சு.
ஆர்த்தி ( தனியார் நிறுவன ஊழியர்)
நான் என் அக்கா, நாங்க ரெண்டு பேரும் தான் கம்பெனி. ஒண்ணு அக்கா என்னை கூப்பிடுவா இல்லை நான் அவளை கூப்பிடுவேன். ரெண்டு பேரில் யார் ஒருவர் சொதப்பினாலும் அன்றைய பிளான் காலி. என்னமோ தனியா வந்து சாப்பிட பிடிக்காது. முக்கியமா நாம இப்படி தனியா உட்கார்ந்து சாப்பிடுறோம் பையன் சாப்பிட்டானா, அவனுக்கு என்ன வாங்கிட்டு போவது, இருக்கிறவங்களுக்கு சாப்பிட என்ன செய்யறது. இப்படி நிறைய மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கும். நானும் அக்காவும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் கூட இரண்டு பேருடைய பேச்சும் இப்படித்தான் இருக்கும். வீட்ல இருக்கிறவங்களுக்கு என்ன சமைக்கிறது இல்ல ஏதாவது வாங்கிட்டு போலாமா. இப்படித்தான் யோசிப்போம். எவ்வளவு பசியானாலும் கூட இன்னும் 15 நிமிஷம் ஆனா வீட்டுக்கு போயிடலாமே அப்படிங்கற நினைப்பிலேயே வீடு வந்து சேர்ந்திடுவேன். உண்மையாவே இந்த நினைப்பெல்லாம் ஆண்களுக்கு வருமா?
வைஷ்ணவி ( தனியார் வங்கி பணியாளர்)
என்னுடைய பேங்க் வேலைகளுக்காகவே தனியாக பயணிக்கிற சூழல் இருக்கும். ஆபீஸ் மீட்டிங், பேங்க் முகாம்கள், இப்படி நிறைய அவசிய தேவை இருக்கு. குடும்பத்தை விட்டு வெளியூரில்தான் வேலை செய்கிறேன். அப்படியானபயணத்தில் தனியா தான் சாப்பிட்டாகணும். ஆனால் தனியா உட்கார்ந்து சாப்பிடணும் என்கிறதுக்காகவே முதல்ல நல்ல ஹோட்டல் தேர்வு செய்யணும். அப்படி தேர்வு செய்து உட்கார்ந்தால் கூட அவ்வளவு சீக்கிரம் வெயிட்டர் வந்து ஆர்டர் எடுக்க மாட்டார்.ஒரு சிலர் ஏளனமாகவே பார்ப்பாங்க. போதா குறைக்கு இரண்டு மூன்று ஆண்களாக சேர்ந்து வந்து சரியா நம்ம டேபிள் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு , காது பட கிசு கிசுப்பாங்க. ஏதாவது பெரிய ஹோட்டல்களில் உட்காரலாம்ன்னு பார்த்தால் பில் கையைக் கடிக்கும். இந்தத் தயக்கம் வித்தியாசமான பார்வை இதையெல்லாம் இப்போ கண்டுக்கறதே கிடையாது. பழகிடுச்சு.
பிரியா ( பத்திரிகையாளர், மதுரை )
இதற்கு காரணம் நம்ம மனநிலை இல்ல. சுற்றி இருக்கிற சூழல் கொடுக்கிற குறுகுறு பார்வைதான். ஏன் தியேட்டரில் உட்கார்ந்து தனியா படம் பார்க்க எவ்வளவு சங்கடமா இருக்கும் தெரியுமா. இதில் உள்ளே வரும்போது என்கூட யார் வராங்க, யாரும் வருவாங்களா என்கிற கேள்வி பார்வையாக வந்து விழும். ஹோட்டலுக்கு சென்றால் கூட மினி டிபன் ஆர்டர் பண்ணவே தயக்கம் இருந்துச்சு ஆரம்பத்தில். காரணம் ‘‘தனியா உட்கார்ந்து இந்தக் கட்டு கட்டுதே’’ இப்படி கூட நினைப்பாங்களோ அப்படின்னு தயங்கினேன். இதுக்கெல்லாம் காரணம் நம்மை வளர்த்த சமூகமும் நம்மை பார்க்கிற சமூகமும் தான். இந்த பார்வையில சின்ன ஊர், பெரிய ஊர் இந்த பாகுபாடு எல்லாம் கிடையாது. சென்னை மாதிரி மெட்ரோ நகரத்தில் கூட இந்தப் பார்வையை நான் சந்தித்து இருக்கேன். கொஞ்ச நாள் தயக்கமா இருந்துச்சு பிறகு யாரையும் கண்டுக்கறதுகிடையாது. என்னுடைய தோழன் மொபைல் அப்படின்னு கையிலே எடுத்திடுவேன்.
கீதா நாராயணன் ( சமூக மேம்பாட்டு ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்)
இப்போ சூழல் மாறிட்டு வருது. ஆனாலும் இது பெண்களின் மனநிலை கிடையாது. அவர்களை அப்படி தயங்கி நிற்க வைத்ததுதான் சமூகத்தின் வெற்றி. நானே அலுவலகப் பணிகளுக்காக தனியாக சில ஊர்களுக்கு செல்வதுண்டு. இன்னும் சில சிற்றூர்களில் தனியாக பேருந்தில் வரும் பெண்களையே வித்தியாசமாக பார்க்கும் நிலை இருக்கத்தான் செய்யுது. ஒரு பெண் நிச்சயம் தனியாக தனது பில்லை கட்ட மாட்டாள், தனியாக டிக்கெட் எடுத்து பயணிக்க மாட்டாள், ஏன் தனியாக அவளால் வாழ்க்கையையே ஓட்ட முடியாது எல்லாவற்றிற்கும் அவளுக்கு ஆண் துணை தேவை, அல்லது தேவைப்பட வேண்டும் என்கிற மனநிலையை சிறு வயதிலிருந்து நமக்குள் புகுத்தி ஆண்களுக்கு மிக சாதாரணமாக கிடைக்கும் வாழ்வியலை கூட பெண்களுக்கு கிடைக்க விடாமல் அல்லது தயக்கத்துடன் பெறுவது போலத்தான் மாற்றி இருக்கிறார்கள். சரி காலம் காலமா பெண்கள் மாறிட்டு வர்றாங்க, சாதனை படைக்கிறாங்க, படிக்கிறாங்க என பெருமைப்பட்டுக்கொள்கிறோமே.
இதெல்லாம் நாமாக செய்தோமா இல்லை சமூகம் உதவியதா?. எல்லாமே சண்டை போட்டு கேட்டு பிடுங்கி நாம இன்னைக்கு வாழ்ந்துகிட்டு இருக்கோம். எதுவுமே இங்க சமூகத்தால் விருப்பப்பட்டு பெண்களுக்கு கொடுக்கப்படலையே. எல்லாம் போராடி எடுக்கப்பட்டதாகத்தானே இருக்கு. அதன் விளைவுதான் இன்னைக்கு தனியா உட்கார்ந்து பசிக்கு சாப்பிடுவதற்குக் கூட பெண்களே தயங்குற அளவுக்கு மாற்றி இருக்கு. ஏன் ஒரு மீடியா செய்தியிலேயே படிச்சிருக்கேன், பெண்கள் நிச்சயமா பில் கட்ட மாட்டாங்க. எத்தனை நாளைக்கு இதை சொல்லுவாங்கனு தெரியல. உண்மையில் பாய்ஸ் ட்ரிப் மற்றும் கேர்ள்ஸ் ட்ரிப் ரெண்டு கணக்கு வழக்குகளையும் ஆராய்ந்து பாருங்கள். கேர்ள்ஸ் ட்ரிப் கணக்குகள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். ஒருத்தர் இன்னொருத்தர் உழைப்பையும் அவங்க வருமானத்தையும் மதிப்பாங்க. ஒரு ரூபாய் ஆனாலும் பகிர்ந்துதான் செலவு செய்வாங்க. இந்த பழக்கம் பசங்க கிட்ட இருக்காது. எப்படி எல்லாத்தையுமே சண்டை போட்டு போராடி நமக்கென வாங்கினோமோ இந்த தயக்கத்தையும் நாம தான் உடைத்து எறியணும். எப்படி எல்லாத்துக்கும் சண்டை போட்டு நமக்கான உரிமையை மீட்டோமோ அதே மாதிரி இதுவும் நாம போராடி வாங்க வேண்டிய உரிமை தான். சாப்பிட, தூங்க, தனியாக நடக்கக் கூட தயங்கும் அளவுக்கு மாற்றியதே இந்த ஆதிக்க சமூகத்தின் வெற்றி. முதலில் அதை உடைப்போம், பிறகு சந்திரனில் கால் பதிப்போம்.
- ஷாலினி நியூட்டன்.