சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை
சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாக்குடி கிராமத்தில் குடியிருப்புகள், விளைநிலங்கள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. 2 பள்ளிகள் செல்லும் வழியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.
மேலும் குடிமகன்கள் தாங்கள் குடிக்கும் மதுபான பாட்டில்களை விளை நிலங்களில் வீசி செல்வதால், விவசாய பணிக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் பெண்கள் அந்த பகுதியை கடக்க பயமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு குடிமகன்கள் வாகனத்தை வேகமாக இயக்குவதால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அனைவருக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சீர்காழி இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் டாஸ்மாக கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பெண்கள் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. மற்றும் போலீசார் டாஸ்மார்க் கடையை மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலந்து சென்றனர்.