பெண்ணை பலாத்காரம் செய்த உபி. மாஜி எம்எல்ஏ: பெங்களூரு போலீசார் வழக்கு
பெங்களூரு: பதிவு திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்ததாக உபி மாஜி எம்எல்ஏ மீது பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேச மாநிலம், தெபாய் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மாவுடன் பழகினார். பகவான் சர்மா கடந்த 2007 பகுஜன் சமாஜ் வேட்பாளராகவும் 2012ல் சமாஜ்வாடி கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாளடைவில் இருவரின் பழக்கம் காதலாக மாறியது. தனக்கு திருமணமாகவில்லை என்று கூறிய பகவான் சர்மா, பதிவு திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.
பகவான் மீதான நம்பிக்கையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் நெருக்கமாக பழகியதுடன் உடலுறவிலும் அடிக்கடி ஈடுபட்டுள்ளார். பின் இருவரும் நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பகவான்சர்மா, பெங்களூரு வந்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணும் முன்கூட்டியே பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தார். பகவான் சர்மா, விமானத்தில் வந்து இறங்கியபின், விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கினர்.
பின் மைசூரு, சித்ரதுர்கா ஆகிய இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இதனிடையில் அந்த பெண்ணுடன் இருக்கும்போதே, அவரது மனைவியுடன் பகவான் சர்மா செல்போனில் பேசியுள்ளார். அப்போது தான் பகவான் சர்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தது. உடனே அப்பெண் திருமணமாகவில்லை என்று ஏன் பொய் கூறினீர்கள் என்று சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் உறவில் ஈடுப்பட்டதாக பகவான் சர்மா மீது, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையேற்று கொண்ட போலீசார், பகவான் சர்மா மீது தேதி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.