இன்ஸ்டாவில் காதலித்து 5வது திருமணம் குழந்தைகளை தவிக்க விட்டு ஓடி 6வதாக வாலிபரை மணந்த பெண்: கலெக்டரிடம் கணவர் கதறல்
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் சிவகுமார் (33) கலெக்டரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். சென்னை துறைமுகம் பகுதியில் டிரைவராக வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கும், மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி (29) என்பவருக்கும் இன்ஸ்டாவில் காதல் ஏற்பட்டது. கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்டேன்.
முதல் வருடத்தில் ஒரு ஆண் குழந்தையும், அடுத்த வருடத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நான் சென்னையில் டிரைவராக வேலை செய்தபோது, காளீஸ்வரி அடிக்கடி உறவினரை பார்க்க ஆந்திரா சென்றார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் யாரிடமும் சொல்லாமல் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதுகுறித்து நான் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் கண்டுபிடித்து தரவில்லை. மேலும் காளீஸ்வரி, வீட்டை விட்டு செல்லும்போது 3 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். இதற்கு முன் 4 பேரை ஏமாற்றி காளீஸ்வரி திருமணம் செய்து கொண்டுவிட்டு என்னை 5வதாக திருமணம் செய்தார்.
இதில் இரண்டு கணவர்கள் மன உளச்சலால் இறந்தே போய் விட்டனராம். தற்போது 6வதாக ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. தற்போது இரு குழந்தைகளும் தாயை காணாமல் கதறி அழுகின்றனர். எனக்கு வேறு யாரும் இல்லை. குழந்தைகளை பராமரிப்பதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படுகிறேன். ஆகையால் எனது இரு குழந்தைகளையும் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்கள் அரசு நடத்தும் குழந்தைகள் நல பாதுகாப்பு விடுதிகளில் சேர்த்து பாதுகாப்பு வழங்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.