ஒரகடம் அருகே காதலனை கத்தியால் குத்திய பெண் கைது
ஸ்ரீபெரும்புதூர்: அசாம் மாநிலம், சீல்பேரி பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் சையத் (31). இவர், ஒரகடம் அருகே சென்னகுப்பம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, ஒரகடத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். முன்னதாக, அசாம் மாநிலம், குவாதி பகுதியைச் சேர்ந்த பரிதாபேகம் (31) என்ற பெண்ணுடன் சையத்துக்கு பழக்கம் ஏற்பட்டு, இங்கு ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக சையத்வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடன் இருந்த பரிதா பேகம் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, அடிதடி தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இம்ரான் சையத்தின் நடவடிக்கையில் பரிதா பேகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக சையத்திடம் அவர் கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான பரிதா பேகம், காய்கறி நறுக்கும் கத்தியால் இம்ரான் சையத்தை சரமாரி குத்தியதில் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, பரிதா பேகத்தை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன், மனைவி இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.