ஓடும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த பெண்: உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரருக்கு பாராட்டு
அரியலூர்: விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில், நேற்றுமுன்தினம் காலை 7.28 மணிக்கு அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடைக்கு வந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு 7.29 மணிக்கு லேசான மழை பெய்த நிலையில் மெதுவாக புறப்பட்டபோது 2 பெண்கள் ஓடி வந்து ரயிலில் ஏற முயன்றனர். ஒருவர் தாவி குதித்து உள்ளே சென்றார்.
இரண்டாவது பெண் ஏறியவுடன் தடுமாறிய நிலையில் இடது கையில் கைப்பிடியை பிடித்து தொங்கினார். எந்த நேரத்திலும் விழுந்து விடுவார் என்ற நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரரான ஏட்டு செந்தில் ஓடி சென்று அந்த பெண் பயணியை தாங்கி பிடித்து காப்பாற்றினார். பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியதையும், அவரை காப்பாற்ற ஆர்பிஎப் வீரர் போராடுவதையும் பார்த்த கார்டு, லோகோ பைலட்டுக்கு தெரிவிக்க ரயில் நிறுத்தப்பட்டது.
அந்த பெண்ணுக்கு ஆர்பிஎப் வீரர் அறிவுரை கூறி ரயிலில் ஏற்றி அனுப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண் பயணியின் உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் தலைமை காவலர் செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.