புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் விரிவாக்கம் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா கொண்டாட்டம்
*காணொலி நிகழ்ச்சியில் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் கருப்பொருளில், தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழாவில், 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உட்பட விரிவாக்க திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவசவுந்திரவல்லி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் இந்த நிகழ்ச்சியின் நேரடி காணொலி காட்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, இஸ்லாமிய கல்லூரி வாணியம்பாடி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூர், இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாணியம்பாடி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என 30 கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மேலும், கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் அமர்ந்து காண்பதற்கு முறையான அனைத்து விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரியா ஆந்தோனி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.