அருமனை அருகே மண்வெட்டியால் அடித்து பெண் கொலை
*முன்னாள் ராணுவ வீரர் கைது
அருமனை : அருமனை அருகே பாதை தகராறில் மண்வெட்டியால் அடித்து அண்ணன் மனைவியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் அருமனை அருகே மாறப்பாடி பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி வசந்தா (53). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரகலாதன் (48). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தற்போது கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரகலாதன் இறந்து போன கிருஷ்ணசாமியின் தம்பி ஆவார். இந்தநிலையில் வசந்தா - பிரகலாதன் இடையே கடந்த 3 மாதமாக பாதை சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.
பிரகலாதன் சமீபத்தில் கார் வாங்கி உள்ளார். அவரது வீட்டிற்கு செல்லும் பாதை 3 அடி அளவில் குறுகலாக உள்ளது. இதனால் காரை உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதையை வரிவாக்கம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அது பயன் அளிக்க வில்லை.
இதனால் பிரகலாதன் காரை தெருவில் நிறுத்தி வந்துள்ளார். பாதையை விரிவாக்கம் செய்ய வசந்தா இடையூறாக இருப்பதாக நினைத்து அண்ணியான வசந்தாவிடம், பிரகலாதன் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வசந்தா, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பிரகலாதன், அங்கிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.
அப்போது மண்வெட்டி கைபிடியால் வசந்தாவை சரமாரியாக தாக்கினார். இதில் வசந்தா மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வசந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து அருமனை போலீசார் பிரகலாதன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அருமனை இன்ஸ்பெக்டர் சாந்தி சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த வழக்ைக கொலை வழக்காக மாற்றி போலீசார் பிரகலாதனை கைது செய்தனர்.