காஞ்சியில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாம்; 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் 24, 25 ஆகிய வார்டுகளில், உங்களுடன் முதல்வர் திட்ட முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், முகாமுக்கு வரும் மக்களின் உடல் நலனை பேணும் வகையில், மருத்துவ சேவை வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டார். இதையடுத்து, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 8 பயனாளி களுக்கு வகுப்பு சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்று, 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை கள், ஒரு பயனாளிக்கு தமிழ்நாடு கட்டுமான நலவாரிய பதிவு சான்றிதழ், ஒரு பயனாளிக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் உறுப்பினர் புதுப்பித்தல் அட்டை என 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து, உத்திரமேரூர் அடுத்த எடமச்சி, அன்னாத்தூர், பொற்பந்தல், சிறுபினாயூர், சித்தனக்காவூர், சாலவாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் ஆர்.காந்தி கேட்டறிந்தார். இதையடுத்து, 3 பயனாளிகளுக்கு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், 4 பயனாளிகளுக்கு வீட்டுவரி ரசீது, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை, 9 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, 4 பயனாளிகளுக்கு வேளாண் விதைதொகுப்பு மற்றும் வேளாண்மை துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் என 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சார் ஆட்சியர் ஆஷிக்அலி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.