பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் குன்னூர் ரயில் நிலையம்: பாரம்பரிய அம்சங்களுக்கு பாதிப்பு இன்றி புனரமைப்பு பணி
ஊட்டி: கம்பீரமாக காட்சியளிக்கும் குன்னூர் ரயில் நிலையத்தின் கட்டமைப்புகளை சீர்குலைக்காமல் புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மலை தொடரில் அடிவாரத்தில் மேட்டுப்பாளையதில் இருந்து குன்னூர் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு 1899 ஆண்டில் இருந்து போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து ரயில் பாதை ஃபர்ன்ஹில் மற்றும் உதகை வரை நீட்டிக்கப்பட்டது. தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் மிகவும் செங்குத்தான சாய்வுகள் வழியாக 45.88 கிலோ மீட்டர் நிலத்துக்கு நீலகிரி மலை ரயில் 250 பாலங்கள் மற்றும் 16 சுரங்கங்களுடன் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், நூற்றாண்டுகளை கடந்த ரயில் நிலையம், பாரம்பரிய அம்சங்களுக்கு பாதிப்பு இல்லாமல் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. மலை ரயில் நிலையத்தின் மேற்கூரை அகற்றி புதிய மேற்கூரையும், சுற்றுலா வாகனங்களை நிறுத்த தேவையான வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்தில் புதிய நுழைவாயில் அமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், அங்குள்ள கண்கவர் ஓவியங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. குன்னூர் ரயில் நிலையம் புனரமைக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.