மாந்திரீகம் செய்யப்பட்டது போல் சமாதி
*அரசு நிலத்தில் ஈம காரியம் செய்த நபரால் பரபரப்பு
ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி மவுண்ட் ஸ்டுவர்ட் ஹில் பகுதியில் வனத்துறை அலுவலகங்கள், பழைய மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதிக்கு அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான காலியிடம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இப்பகுதியில் மயானத்தில் இறந்த குழந்தை உடலை புதைத்து கற்கள் நட்டு வைக்கப்பட்டதை போன்ற சமாதி மற்றும் பூஜை பொருட்கள் சிதறி கிடந்தது.
இது மாந்திரீகம் செய்யப்பட்டதை போன்று காட்சியளித்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் அன்பரசு, ஊட்டி வட்டாட்சியர் சங்கர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் ஊட்டி ஆர்டிஓவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதிக்கு வந்த ஊட்டி ஆர்டிஓ டினு அரவிந்த் விசாரணை மேற்கொண்டார். குழந்தைகளை புதைத்தது போன்ற சமாதி அமைப்பில் இருந்ததால், மாந்திரீகம் ஏதேனும் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. அதே பகுதியில் ஒருவர் வீட்டில் இறப்பு நிகழ்ந்தது குறித்து விசாரணையில் தெரியவந்தது.
அவர்களை அழைத்து விசாரித்த போது, நந்தகுமார் என்பவர் தனது மாமியார் லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து போனதாகவும், அவருடைய அஸ்தியை குழி தோண்டி புதைத்து அதற்கு ஈம காரியங்கள் செய்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதுபோன்று அரசு நிலங்களில் செய்ய கூடாது என வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.