குளிர்கால கூட்டத்தொடரில் சண்டிகர் மசோதா இல்லை: ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி: பஞ்சாப், அரியானாவின் தலைநகராக இருக்கும் சண்டிகருக்கு யூனியன் பிரதேசத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கு, நேரடியாக சட்டம் இயற்ற குடியரசு தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 240வது பிரிவின் கீழ் சண்டிகரை கொண்டு வருவதற்கு முன்மொழியும் மசோதா தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு பஞ்சாபில் உள்ள தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில்,ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘சண்டிகர் தொடர்பாக முன்மொழியப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை. சண்டிகரின் நலன்களை கருத்தில் கொண்டு அனைவருடனும் போதுமான ஆலோசனைக்கு பின்னர் தான் பொருத்தமான முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.