குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் துணை ஜனாதிபதி சந்திப்பு: காங். தலைவர் கார்கே கலந்து கொள்வாரா?
புதுடெல்லி: அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் அவைத் தலைவர்கள் கூட்டத்திற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டின் 15வது துணைக் குடியரசுத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் 12ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின்னர் சில தலைவர்களை அவர் முறைசாரா வகையில் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அவர் அவைத் தலைவர்களுடன் நடத்தும் முதல் முறையான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வரும் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 7) நடைபெற உள்ளது. துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவை முன்னவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட சுமார் 30 கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இருப்பினும், இதய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், வேறு அலுவல் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் அவைத் தலைவர்கள் கூட்டத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.