நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிச.19ம் தேதி வரை நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் .19ம் தேதி வரை நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும் வழக்கம். அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடர்களில் பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். வரும் டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 19ம் தேதிவரை இக்கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிலையில்,இந்த கூட்டத்தொடரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.