சூலூர் அருகே காற்றாலை இயந்திரம் தீயில் எரிந்து சேதம்
சூலூர்: சூலூர் அருகே இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாக காற்றாலை இயந்திரம் தீயில் எரிந்து சேதமானது. கோவை மாவட்டம் சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இந்தியாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் காற்றாலை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து அரசுக்கு வழங்கி வருகிறது. கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காற்றாலை மின்சார தயாரிக்கும் இயந்திரம் இயங்கி வருகிறது.
இந்த பகுதியில் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளதால் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் காற்றாடிகள் இயங்கி வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாத காற்றாடிகள் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாக செலக்கரச்சல் பகுதியில் காற்றாலை இயந்திரத்தில் இருந்து லேசாக புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் காற்றாலை இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.