போர் முடிவுக்கு வருமா?
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 3 ஆண்டுகள், 5 மாதங்கள், 3 வாரங்கள், 6 நாட்கள் ஆகிவிட்டது இன்றோடு... முடிவுக்கு எப்போது வரும் என்பது தெரியவில்லை. முயற்சித்து பார்க்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். 10 ஆண்டுகள் கழித்து ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு வரவழைத்து போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் போர் நிறுத்தம் குறித்து பேசியிருக்கிறார். இறுதியில் புடின் மற்றும் ஜெலன்ஸ்கியை நேரில் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஆலோசித்து இருக்கிறார். போர் முடிவுக்கு வந்தால் நல்லது.
அந்த அளவுக்கு ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வருவதால் உலக நாடுகள் மத்தியில் அத்தனை மாற்றம். கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு, இன்னும் சொல்லப்போனால் அத்தனை ெபாருட்களின் விலையும் உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. உலகமே பெரும் பொருளாதார வீழ்ச்சியிலும், வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கத்திலும் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. இஸ்ரேல்-காசா போர் கூட இந்த அளவுக்கு உலக நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் ரஷ்யா, உக்ரைன் போர் மிகவும் உக்கிரமாக தாக்கி வருகிறது. பொருளாதார பிரச்னை மட்டுமல்ல, இரு நாடுகளிலும் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியாகி வருகிறார்கள். பல கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. மக்கள் இடம் மாறி தப்பிச்செல்ல வேண்டிய சூழல். இன்னும் ஏராளமான பாதிப்புகள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘முழு உலகமும் போரைக் கண்டு சோர்வடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் அதை முடிவுக்கு கொண்டுவரப் போகிறோம். நான் 6 போர்களை முடித்துள்ளேன். இது எளிதான ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
இது எளிதான ஒன்றல்ல. இது ஒரு கடினமான ஒன்று. இருப்பினும் இந்த போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவருவோம் என்று நம்பிக்கையுடன் உணர்கிறேன். உக்ரைன் அதிபர் எங்களுடன் இருப்பது ஒரு மரியாதை. நாங்கள் நிறைய நல்ல விவாதங்களை நடத்தியுள்ளோம், நிறைய நல்ல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன், பல வழிகளில் மிகவும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபருடன் ஒரு நல்ல சந்திப்பை நடத்தினோம்.
அதன்பிறகு நடந்த ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது. போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார், விளாடிமிர் புடின் அதை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்’ என்றார். டிரம்ப் 6 போரை நிறுத்திவிட்டேன் என்று சொல்லட்டும். அல்லது இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 60 முறை கூட சொல்லட்டும். அது இங்கு பிரச்னை இல்லை. மனித உயிர் பலி வாங்கும், மனித உழைப்பில் பல நூற்றாண்டுகளாக உருவான கட்டமைப்புகளை அழிக்கும் கொடூரம் இனி வேண்டாம்.
அது எங்கு நடந்தாலும் இந்தியா ஒருபோதும் போரை ஏற்றுக்கொள்ளாது. இந்தியா என்றுமே அமைதியின் பக்கம். இது காந்தியின் தேசம். அகிம்சையை உலகிற்கு கற்றுக்கொடுத்த தேசம். அமைதி வழியே இந்தியாவின் வழி. இந்தியாவின் பாரம்பரியத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட பிரச்னைக்காக, சுயநலத்திற்காக கூட போர்களை நீட்டிப்பதால் பலியாகும் அப்பாவி உயிர்பலியை நிறுத்த நிச்சயம் ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மட்டுமல்ல, காசா மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேலும் கூட போரை நிறுத்த வேண்டும். இதுதான் உலகத்தின் விருப்பம்.
