உண்மை வெளிவருமா...?
குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. இந்த விவகாரத்திலாவது தேர்தல் ஆணையம் நியாயமாக நடவடிக்கை எடுக்குமா அல்லது பிரமாணப்பத்திரம் கேட்குமா என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கோடிகளை குவித்துள்ள இந்த காலக்கட்டத்தில், இந்த கட்சிகள் 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் 2022 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ளன.
ஆனால், இவற்றில் வெறும் 43 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தி, 54,069 என்கிற சொற்ப வாக்குகளை பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையின்படி இந்த கட்சிகள் ரூ.39.02 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், ஆனால், வருடாந்திர நிதி தணிக்கையில் ரூ.3,500 கோடி என கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்சிகளின் தேர்தல் பங்களிப்புகளையும், அவற்றுக்கு கிடைத்த நிதியையும் ஒப்பிடும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. இந்த கட்சிகள் மிக குறைவாகவே தேர்தலில் போட்டியிட்டு, செலவும் செய்திருக்கின்றன.
இவர்கள் பெயரையே யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் ரூ.4,300 கோடி நன்கொடை எங்கிருந்து வந்தது? இவற்றை வசூலித்த, இந்த கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது என்பது பெரும் மர்மாக உள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதும், வாக்குகள் திருடப்பட்டுள்ளதும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது அடங்குவதற்குள் அடுத்த பூதாகரம் இம்மாநிலத்தில் இருந்து வெளிவந்துள்ளது. இவை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சனம் செய்ய வைக்கிறது. அரசியல் களத்தில் வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி.
ஆனால், குஜராத்தில் நடந்துள்ள இந்த மோசடி, இந்திய அரசியல் நிதி மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. குஜராத்தை மையமாக கொண்டு செயல்படுவதாக கூறப்படும் இந்த 10 கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெயரளவில்கூட மக்களிடம் அறிமுகம் இல்லாத இந்த கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை நன்கொடையாக வழங்கியது யார்? தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத கட்சிகள், தங்களுக்கு கிடைத்த நிதியை எதற்காக செலவிட்டன? தேர்தல் செலவுக்கும், தணிக்கை அறிக்கை செலவுக்கும் இடையே உள்ள இந்த மாபெரும் வித்தியாசம் ஏன்? இந்த கட்சிகள், நிதி முறைகேடுகளுக்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதா? என ஒவ்வொரு கேள்விக்கும், இந்திய தேர்தல் ஆணையம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இந்த நிதி மோசடியில், மையத்தில் ஆளும் பா.ஜ., அரசு மீது பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதே, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு. ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்காமல், இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்துமா அல்லது ஒன்றிய அரசின் மகுடிக்கு பயந்து, வழக்கம்போல் பெட்டி பாம்பாக அடங்கிப்போகுமா? விடை எப்போது? பொறுத்திருந்து பார்ப்போம்.