நாகர்கோவில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய முக்கடல் அணை, பூங்கா பராமரிக்கப்படுமா?.. பழமைவாய்ந்த கட்டிடம் இடிந்தது
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களின் தேவைக்காக முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. பின்னர் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. முக்கடல் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும்போது 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் தொகை அதிகரிப்பு, மாநகராட்சி விரிவாக்கம் போன்ற காரணத்தால், குடிநீர் தேவை அதிகரித்தது. அதைத்தொடர்ந்து உலக்கை அருவி திட்டம், புத்தன் அணை திட்டம் என பல திட்டங்கள் ஆராய்ந்து, புத்தன்அணை குடிநீர் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து வரும் தண்ணீர் புத்தன்அணைக்கு வந்து அங்கிருந்து கால்வாயில் பிரிந்து செல்கிறது. புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் ெகாண்டுவரப்பட்டு தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்ததால், முக்கடல் அணையின் முன்புஉள்ள இடத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1.50 கோடி செலவில் 3 பூங்கா அமைக்கப்பட்டது. பூங்கா அமைக்கப்பட்டதால், பல இடங்களில் இருந்து மக்கள் முக்கடல் அணையை பார்க்க வந்தனர். முக்கடல் அணையை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அங்கு பல வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். முக்கடல் அணையில் நீர் குறையும்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு அனந்தனார்சானல் வழியாக வரும் தண்ணீரை முக்கடல் அணைக்கு பம்பிங் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கான முக்கடல் அணையில் போதிய பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இப்படி பல்வேறு வழிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததால், முக்கடல் அணைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மேலும் அங்கு பணியாற்றி வந்த பணியாளர்கள் பூங்காவை பராமரித்து வந்தனர். இதன் காரணமாக பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட்டதால், முக்கடல் அணையை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதனால் அணையின் முன்புள்ள பூங்காக்கள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் முக்கடல் அணையின் நுழைவாயில் அருகே பழமைவாய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஊழியர் ஒருவர் இருந்துகொண்டு, அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலித்து வருகிறார்.
இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அந்த கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பக்கசுவர் இடிந்துவிழுந்துள்ளது. இதனால் அங்கு கட்டணம் வசூல் செய்யும் ஊழியர் பாதுபாப்பு இன்றி அந்த கட்டிடத்தில் அமர்ந்து கட்டணம் வசூலித்து வருகிறார். முக்கடல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்பவர்கள் அமரும் வகையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி முக்கடல் அணை தண்ணீர் தேவைப்பட்டபோது அதிகாரிகள் அடிக்கடி முக்கடல் அணைக்கு சென்று வந்தனர். முக்கடல் அணையின் தேவை அதிகமாக இருந்ததால், அங்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் 3 பூங்கா அமைக்கப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையில் பூங்காவில் விளையாட்டு உபரகணம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது.
தற்போது புத்தன் அணையின் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுவதால், முக்கடல் அணையை கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்பு அதிகாரிகள் அடிக்கடி சென்று வந்ததால், அங்கு இருக்கும் பணியாளர்கள் பூங்காவில் உள்ள புற்களை அகற்றி வந்தனர். தற்போது பணியாளர்கள் தண்ணீர் பம்பிங் வேலையை மட்டும் செய்துகொண்டு செல்கின்றனர். இதனால் பூங்காவிற்கு புற்கள் வளர்ந்து வருகிறது. மேயர் மகேஷ் முக்கடல் அணையில் ஆய்வு செய்தபோது அங்கு ஒரு சுற்றுலா விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அந்த விடுதி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பூங்காவின் நுழைவாயில் அருகே உள்ள பழமைவாய்ந்த கட்டிடம் தற்போது பெய்து வரும் மழையால் இடிந்துவிழுந்துள்ளது. நுழைவாயில் கட்டணம் வசூல் செய்பவர்கள் இருக்கும் வகையில் ஒரு கட்டிடம் கட்டவேண்டும். மேயர் ஆய்வு செய்து, அங்கு பணியாற்றும் பணியாளர்கள் பூங்காவை சரிவர பராமரிக்க அறிவுரை வழங்குவதோடு, அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.