நீதி கிடைக்குமா?
தர்மஸ்தலாவில் 20 ஆண்டுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்களை நேத்ராவதி நதிக்கரை ஓரத்தில் புதைக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக கோயில் முன்னாள் தூய்மைப்பணியாளர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்தார். பள்ளி சிறுமிகள், பெண்கள் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர். பள்ளி சிறுமிகளை அவர்களது சீருடை, பாடப்புத்தக பையுடன் புதைத்தேன் என்று அவர் புகாரில் கூறியிருந்தார். இவரது புகார் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தர்மஸ்தலாவில் உண்மை நிலையை கண்டறிந்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்ற முதல்வர் சித்தராமையா தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை டிஜிபி அதிகாரத்தில் இருக்கும் பிரணாவ் மொகந்தி தலைமையில் அமைத்து உத்தரவிட்டது. எஸ்ஐடி குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று புகார்தாரரை நேரில் அழைத்து விசாரித்தனர்.
அவரது வாக்குமூலத்தின் படி நேத்ராவதி வனப்பகுதி, மலைப்பகுதிகளுக்கு அழைத்து சென்று எங்கெல்லாம் அவர் சடலங்களை புதைத்தார் என்று கேட்டு அடையாள குறியிட்டனர். அவர் மொத்தம் 13 இடங்களை அடையாளம் காட்டினார். அந்த இடங்களை குறியீடு செய்து எஸ்ஐடி குழு தோண்டி சோதனை நடத்தினர். அதன்படி 6வது இடத்தில் ஒரு ஆண், பெண் சடலங்களின் எலும்புகள் சிக்கியது. சில இடங்களில் பான்கார்டு, ஏடிஎம் கார்டும், ஒரு சேலையும் கிடைத்தது. இதைதவிர மற்ற இடங்களில் குழி தோண்டி சோதனை நடத்தியதில் எந்த தடயமும் சிக்கவில்லை.
இந்நிலையில் 11வது இடத்துக்கு 100 மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தை புகார்தாரர் காண்பித்தார். அங்கு தோண்டிய போது சில எலும்புகள் சிக்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி 12, 14, 15, 16 ஆகிய இடங்களில் எந்த தடயமும் சிக்கவில்லை. இதையடுத்து கடைசியாக 13வது இடத்தை தோண்ட திட்டமிட்ட எஸ்ஐடி குழுவினர் ஜிபிஎஸ், ரேடார் மூலம் அந்த இடத்தை ஆய்வு செய்து தோண்ட தொடங்கினர்.
13வது இடத்தில் 18 அடி ஆழம், 13 அடி அகலம் தோண்டியும் எந்த தடயமும் சிக்கவில்லை. இந்நிலையில் எஸ்ஐடி தலைவர் பிரணாவ் மொகந்தி மாநில அரசிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதன் மீது அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில் 13வது இடத்திலேயே வேறு பகுதியில் தோண்டி சடலங்களை தேடும் பணி தொடர்ந்தது. அதன்படி 32 அடி ஆழம் தோண்டப்பட்டும் எந்த தடயமும் சிக்கவில்லை.
இனியும் புகார்தாரர் குறிப்பிடும் இடங்களில் எஐடி அதிகாரிகள் சோதனை நடத்துவார்களா? அல்லது விசாரணை முடித்து கொள்ளப்படுமா என்ற முடிவு அரசிடம் தான் உள்ளது. தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக பேரவையில் கர்நாடக அரசு, நாங்கள் யாருக்கும் ஆதரவு கிடையாது. மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.