தடம் மாற செய்யும்
நடப்பாண்டு (2025) அக்டோபர் 1ம் தேதி முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை, வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஊடகப்பகுதியில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘அக்டோபர் 1ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மருந்து தயாரிப்புக்கும் 100 சதவீத வரியை விதிக்கப் போகிறோம். அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டு இருந்தால், இந்த மருந்து பொருட்களுக்கு எந்தவரியும் இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பும் இந்தியாவிற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் சர்வதேச மருந்து விற்பனை கூட்டமைப்பின் நிர்வாகிகள். மருந்து பொருட்களுக்கான இந்தியாவின் மிகப்ெபரிய ஏற்றுமதி சந்தையாக தற்போது அமெரிக்கா உள்ளது. 2024ம் நிதியாண்டில் 27.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து ஏற்றுமதியில் 31 சதவீதம் அல்லது 8.7 பில்லியன் டாலர் (ரூ.7,72,31 கோடி) அமெரிக்காவிற்கு சென்றதாக இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் (2025) முதல்பாதியில் மட்டும் 3.7 பில்லியன் டாலர் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் 45 சதவீதத்திற்கு அதிகமாகவும், பயோசிமிலர் மருந்துகளில் 15 சதவீதத்திற்கு அதிகமாகவும் இந்தியாவில் இருந்து தான் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டாக்டர் ரெட்டீஸ், அரபிந்தோபார்மா, சைடஸ்லைப் சயின்ஸ், கிளாண்ட் பார்மா போன்ற நிறுவனங்கள், தங்கள் மொத்த வருவாயில் 30 முதல் 50 சதவீதத்தை, அமெரிக்க மருந்து சந்தையில் இருந்து ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க நுகர்வோர், இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த விலை ஜெனரிக் மருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.
எனவே இந்திய மருந்துகள் மீதான அதிக வரிகள், அமெரிக்காவின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்பதும் இங்கே பதிவு செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம். இது ஒரு புறமிருக்க, அமெரிக்கர் நலனில் ஆர்வம் கொண்ட நாடாகவே இதுவரை இந்தியா இருந்துள்ளது. உதாரணமாக கடந்த 2022ம் ஆண்டில் அமெரிக்க குடிமக்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த 10ல் 4 மருந்துகளை இந்திய நிறுவனங்களே விநியோகித்துள்ளது. அந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் அனுப்பிய மருந்துகளால் ரூ.19.42 லட்சம் கோடியை அமெரிக்க சுகாதாரத்துறை சேமித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பால் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ரூ.88.7 லட்சம் கோடியை அமெரிக்கா சேமித்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய 50 சதவீதம் வரி, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி, அமெரிக்க எச்-1பி விசா கட்டணம் 36 மடங்கு உயர்வு என்று பல்வேறு அஸ்திரங்களை ஏவியுள்ளது அமெரிக்கா. இந்த வகையில் இந்திய பொருளாதாரத்திற்கு உலை வைக்க டிரம்ப் இந்த அஸ்திரத்தை வீசியுள்ளார். இது நமக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில் சீரான அமெரிக்க பொருளாதாரத்தையும் தடம் மாறச்செய்யும் என்பதும் நிதர்சனம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.