நெல்லை, தென்காசி மக்களுக்கு சுதந்திர தின சிறப்பு ரயில்கள் கூடுதலாக அறிவிக்கப்படுமா?
*முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றன
நெல்லை : நெல்லை, தென்காசி மாவட்டங்களை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட சுதந்திர தின சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் 5 நிமிடங்களில் முடிந்து விட்டன. எனவே இம்மார்க்கத்தில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு சிறப்பு ரயிலை அறிவிக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாளான 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாகும்.
அதற்கடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் 3 தினங்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதையடுத்து இவ்வார இறுதியில் சென்னை, கோவை என வெளிநகரங்களில் உள்ள பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இதையொட்டி ரயில்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் இப்போதே முன்பதிவு நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயும் சுதந்திர தின கொண்டாட்ட சிறப்பு ரயில்களை பல்வேறு இடங்களுக்கும் இயக்குகிறது.
சுதந்தின தின விடுமுறை முடிந்து வரும் 17ம் தேதி ஞாயிற்று கிழமை தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வோருக்கும் இப்போதே ரயில்கள் முன்பதிவுகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகளை கருத்தில் கொண்டு வண்டி எண் 06089 சென்னை எழும்பூர் - செங்கோட்டை ரயில் வரும் 14ம் தேதி வியாழக்கிழமை இரவு 9.55 சென்னையில் புறப்பட்டு நெல்லை வழியாக செங்கோட்டைக்கு இயக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக வண்டி எண் 06090 செங்கோட்டை - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்கு செங் ேகாட்டையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக சென்னை செல்கிறது.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு கடந்த 8ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 5 நிமிடத்தில் அனைத்து இருக்கைகளுக்கும் முன்பதிவு முடிவடைந்து விட்டது. மேலும் தொடர்ந்து முன்பதிவு செய்ய முடியாத நிலையும் காணப்பட்டது. சென்னை - செங்கோட்டை ரயிலுக்கு இம்முறை கடும் வரவேற்பு இருந்ததால், பயணிகள் முன்பதிவுகள் செய்ய முடியாமல் வீட்டுக்கு திரும்பினர்.
இதுபோல் வரும் 17ம் தேதி நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு ஒரு சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக வரும் 18ம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விடுமுறை முடிந்து நகரங்களுக்கு செல்வோருக்கு இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலிலும் முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றன. எனவே பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரயிலை நெல்லை, தென்காசிக்கு இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
சுதந்திர தின விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டால் கூட, பயணிகள் அங்கிருந்து அருகிலுள்ள மாவட்டங்களுக்கு செல்ல இணைப்பு ரயில் வசதிகள் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.