மூணாறு தேயிலை எஸ்டேட்களில் உலா வரும் காட்டு யானைகள்: தொழிலாளர்கள் பீதி
மூணாறு: மூணாறு தேயிலை எஸ்டேட்களில் காட்டு யானைகள் உலா வருவதால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இவைகளில் அவ்வப்போது காட்டு யானைகள் முகாமிடுகின்றன. இதனால், வேலைக்கு வரும் தொழிலாளர்கள் அச்சமடைகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தேவிகுளம் எஸ்ட்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களை அச்சுறுத்தி விரட்டி வருகின்றன.
மேலும், தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் யானைகள் புகுந்து குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துகின்றன. சைலன்ட்வேலி எஸ்டேட் பகுதியில் நடமாடும் படையப்பா என்ற ஒற்றை யானை, அப்பகுதியில் உள்ள வாழை, பீன்ஸ், காரட் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகின்றன. எனவே, எஸ்டேட் பகுதியில் முகாமிடும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முகாமிடும் யானைகள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.
சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களை தள்ளிவிட்டு உடைக்கின்றன. சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் வந்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுக்கின்றனர். எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதற்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.