பர்கூர் மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி
அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் தனியார் மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை பலியானது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் கிழக்கு மலையிலுள்ள ஈரட்டி வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ள கடந்த 1 மாத்துக்கும் மேலாக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஈரெட்டி குடியிருப்பு பகுதியிலும், அங்குள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும், தென்னை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததுடன் பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, பர்கூர் வனத்துறையினருக்கு அப்பகுதி மலைவாழ் மக்கள் தகவல் கொடுத்தனர். ஒரு சில நாட்கள் கடமைக்கு யானையை வனத்துறையினர் விரட்டினர். முழுமையாக யானை வெளியேறுவதையும், சேதப்படுத்துவதையும் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அச்சத்தில் இருந்த பொதுமக்கள் யானையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாயி வைரனின் தனியார் தோட்டத்து மின்வேலியில் சிக்கி ஒற்றை ஆண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது. இது குறித்து மலைவாழ் மக்கள் பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடக்கும் ஆண் யானை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.