நீலகிரியில் சாலையோரங்களில் பூத்துகுலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் உள்ளன. இதில் பல வகையான மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் காணப்படுகிறது. இதனை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது வனங்களில் காணப்படும் சில மலர்கள் பூப்பது வழக்கம்.
இதில், காட்டு சூரியகாந்தி மலர்கள், காட்டு டேலியா மலர்கள், எவர்லாஸ்ட் மலர்கள், செர்ரி, ஜெகரண்டா மலர்கள் போன்றவை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாலையோரங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்கள், மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் பல இடங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.