திடல் ஊராட்சியில் பகல் நேரத்தில் கால்வாயை கடந்து செல்லும் காட்டு யானைகள்
ஆரல்வாய்மொழி : திடல் ஊராட்சியில் பகலில் யானை கூட்டங்கள் கால்வாயை கடந்து செல்வதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். பூதப்பாண்டி அருகே உடையார்கோணம், திடல், கடுக்கரை போன்ற மலையோர கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் தாடக மலை அடிவாரத்தில் உடையார் கோணம் பகுதியில் உள்ள தோவாளை கால்வாய் பாலம் வழியாக கிராமங்களுக்குள் சென்று, அங்கிருந்து வாழை தோட்டத்துக்குள் புகுந்து சாகுபடி செய்திருந்த வாழை கன்றுகளை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்துகிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8ம் தேதி காலை விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையில் சில காட்டு யானைகள் தோவாளை கால்வாய் கரையை உடைத்து, சானலில் இறங்கி அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சர்வ சாதாரணமாக சென்றுள்ளன.பின்னர் வழக்கம் போல் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை பார்ப்பதற்காக அந்த வழியாக சென்றபோது ஒரு யானை மட்டும் அந்த சாலையில் நிற்பதை கண்டனர்.
அச்சமடைந்த விவசாயிகள் அதனை பின்தொடர்ந்து பார்த்தபோது அதற்கு முன்பாக 2 யானைகள் கால்வாய் கரையை உடைத்து கொண்டு சானலுக்குள் இறங்கி மறுபுறம் உள்ள அடர்ந்த பகுதிக்கு சர்வ சாதாரணமாக சென்றது.
அதனை தொடர்ந்து சாலையில் வந்த மற்றொரு யானையும் அதே வழியாக காட்டுப்பகுதிக்கு சென்றது. இத்தகவல் அறிந்ததும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட்டங்கள் சென்ற அந்த பகுதியை ஆய்வு செய்தார்.
பெரும்பாலும் விவசாய நிலங்களை இரவு நேரங்களில் காட்டு யானைகள் சேதப்படுத்தி வந்த நிலையில், தற்போது பகல் நேரத்தில் சர்வ சாதாரணமாக காட்டு யானைகள் விவசாயிகள் செல்லும் வழியாக வந்து செல்வது விவசாயிகளிடையே பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
விவசாய நிலங்கள் மீண்டும் யானைகள் மூலம் அழிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே யானைகள் மீண்டும் இந்த வழியாக வராமல் இருப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் , பொதுப்பணித்துறை அதிகாரிகள் யானையால் சேதமடைந்த தோவாளை சானல் உடைப்பை சரி செய்ய வேண்டும் என தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.