குட்டியுடன் சாலையில் திரிந்த காட்டு யானை
*சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு
கூடலூர் : கூடலூரை அடுத்த மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் குட்டியுடன் சாலையில் நடமாடிய காட்டு யானை சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிவட்ட வனப்பகுதிகள் மழை காரணமாக பசுமை அடைந்து காணப்படுகிறது.
எனினும் அடர் வனப்பகுதிகளில் லண்டனா மற்றும் பார்த்தீனியம் உள்ளிட்ட பல்வேறு களைத்தாவரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால், புல்வெளிகள் குறைந்துள்ளன. இதனால் யானைகள், மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட தாவர உண்ணிகள் சாலைஓர புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
வனப்பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் வனப்பகுதிகளுக்கு உள்ளே செல்லும் சாலைகளை ஒட்டி குறிப்பிட்ட சில மீட்டர்களுக்கு ஒவ்வொரு வருடமும் லண்டனா, பார்த்தீனியம் உள்ளிட்ட தாவரங்கள் அகற்றப்பட்டும், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.
இப்பகுதிகளில் மழைக்காலம் துவங்கியதும் பசுமையான புற்கள் வளர்வதால் மான்கள்,யானைகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இந்த புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் இவற்றை பார்த்து ரசிக்க முடிகிறது.
இதேபோல் நேற்று மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் ஒரு குட்டியுடன் கூடிய இரண்டு யானைகள் சாலையோர புல்வெளியில் மேய்ந்தும், சாலையில் நடமாடியும் திரிந்தன. சாலையில் நின்ற தாயிடம், குட்டி யானை பால் குடித்தது. தாய் யானை குட்டியை பத்திரமாக சாலை ஓரத்திற்கு அழைத்துச்சென்றது. இந்தக் காட்சிகளை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து சென்றனர்.