காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் விபத்து மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி
பாலக்காடு : பாலக்காடு அருகே சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், கார் மரத்தில் மோதி வயல்காட்டில் பாய்ந்த விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு 100 அடி ரோட்டை சேர்ந்தவர் ரோகன் (24).
இவர் தனது நண்பர்களான நூரணியை சேர்ந்த ரோகன் சந்தோஷ் (22), யாக்கரையை சேர்ந்த சனுஸ்(19), ரிஷி (24), நெம்மாராவை சேர்ந்த ஜிதின் (21) மற்றும் சந்திரா நகரைச் சேர்ந்த ஆதித்யன் (23) ஆகிய 6 பேருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கல்லிங்கல் பகுதிக்கு காரில் வந்தனர்.
காரை ஆதித்யன் ஓட்டினார். கார் கனால் என்ற இடம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியது. பன்றி மீது மோதாமல் இருக்க ஆதித்யன் காரை திருப்பி போது,கட்டுப்பாட்டை இழந்த கார் சாரையோர மரத்தில் மோதி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய ரோகன், ேராகன் சந்தோஷ், சனுஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த ஆதித்யன்,ரிஷி, ஜிதின் ஆகியோர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.