விக்கிபீடியாவுக்கு போட்டியாக எலான் மஸ்கின் குரோக்பீடியா: 2 வாரத்தில் அறிமுகம்
வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா எனும் ஏஐ மூலம் இயங்கும் தகவல் களஞ்சியத்தை இன்னும் 2 வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆன்லைன் உலகின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியா கடந்த 2001ல் தொடங்கப்பட்டது. இதனை விக்கிபீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த தளத்தில் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா தளத்தில் உள்ள கட்டுரைகள் பக்கசார்பாக இருப்பதாகவும், அரை உண்மைகள் கொண்டவையாக இருப்பதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில் விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா எனும் புதிய தகவல் களஞ்சியத்தை அடுத்த 2 வாரத்தில் அறிமுகம் செய்வதாக மஸ்க் தற்போது அறிவித்துள்ளார். இந்த குரோக்பீடியா எக்ஸ் ஏஐ எனும் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் மூலம் இயக்கப்படும். விக்கிபீடியாவில் வரும் தகவல்களை எக்ஸ் ஏஐ ஆய்வு செய்து அதில் உள்ள தவறுகள், பாதி உண்மைகளை திருத்தி அவற்றை சரி செய்யும். இதன் மூலம் பல உண்மைத் தகவல்களை மக்கள் அறிய முடியும் என மஸ்க் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.