கள்ளக்காதல் சந்தேகத்தால் நடந்த கொடூரம்; நர்ஸ் மனைவியை கொன்றுவிட்டு ரயிலில் பாய்ந்து கணவன் தற்கொலை: ஜார்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சி
ஜாம்ஷெட்பூர்: கள்ளக்காதல் சந்தேகத்தில் செவிலியராகப் பணியாற்றிய மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவன், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஜாம்ஷெட்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரின் பர்சுடி பகுதியை சேர்ந்த சாஹேப் முகர்ஜி என்பவர், தனது மனைவி ஷில்பி முகர்ஜிக்கு (34) வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், வீட்டில் இருந்த மனைவியின் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர், சுந்தர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் தண்டவாளப் பகுதிக்குச் சென்று, அவ்வழியாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கொல்லப்பட்ட ஷில்பி முகர்ஜி, பொட்கா ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பர்சுடி காவல்துறையினர், ஷில்பியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சுந்தர் நகர் காவல்துறையினர் ரயில் தண்டவாளத்திலிருந்து சாஹேப் முகர்ஜியின் உடலை மீட்டுள்ளனர். இதுகுறித்து பர்சுடி காவல் நிலைய பொறுப்பாளர் அவினாஷ் குமார் கூறுகையில், 2சாஹேப் முகர்ஜி, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது செல்பேசி ஸ்டேட்டஸ் மூலமாகவும், தற்கொலைக் கடிதம் மூலமாகவும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். உயிரிழந்த ஷில்பியின் சகோதரர் அமித் குமார், தனது சகோதரிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாகவும், தகவல் கிடைத்து வந்து பார்த்தபோது அவர் கொலையுண்டுக் கிடந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.