மனைவியை சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும்: நர்சுக்கு விவாகரத்து வழங்கி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு நர்சுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கணவன் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதால் அவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறி இவர் கோட்டயம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி ஆனது. இதை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்தது: கோட்டயத்தில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த என்னுடைய வேலையை ராஜினாமா செய்ய வைத்து துபாய்க்கு அழைத்துச் சென்றார். துபாயில் என்னை வேலைக்கு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. அவர் வேலைக்கு செல்லும்போது என்னை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வார். வேறு எந்த ஆண்களுடன் பேசக்கூடாது. டிவி பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்.
பலமுறை என்னை அடித்து துன்புறுத்தி உள்ளார். கணவனுடன் தொடர்ந்து வாழ நேரிட்டால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நர்சின் மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மனைவியை தொடர்ந்து சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும் என்று கூறி நர்சுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.