மனைவியை கள்ளக்காதலனுக்கு மணமுடித்து கணவன் தற்கொலை: தெலங்கானாவில் பரபரப்பு
திருமலை: மனைவியை கள்ளக்காதலனுக்கு மணமுடித்து வைத்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், சத்துப்பள்ளி நகரத்தின் மசூதி சாலையைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ்(28). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், வேற்று மதத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஷேக் கவுஸ் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சமீபத்தில், கவுஸ் குடும்பம் சத்துப்பள்ளி மண்டலத்தின் சத்யம்பேட்டை கிராமத்திற்கு குடிபெயர்ந்து, அங்குள்ள நிலத்தில நெல் பயிரிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கவுசின் மனைவிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த கணவர் ஷேக் கவுஸ், இருவரையும் கையும் களவுமாக பிடித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்பு ஒப்புக்கொள்ள வைத்தார். பின்னர் பாரம்பரிய முறைப்படி தனது மனைவிக்கும், இளைஞருக்கும் திருமணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை உணர்ச்சிவசப்பட்ட ஷேக் கவுஸ் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீடியோ அழைப்பு மூலம் தனது நண்பர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.
பின்னர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பர் மூலம் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்துப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் வேறொருவரை மணந்து, தந்தை தற்கொலை செய்து கொண்டதால் அவர்களின் மூன்று மகள்களும் பரிதவித்து வருகின்றனர்.