கணவரின் காதில் விஷத்தை ஊற்றி கொன்ற மனைவி காதலனுடன் கைது
திருமலை: கள்ளக்காதலை கைவிடும்படி கூறி தாக்கிய கணவரின் காதில் விஷம் ஊற்றி கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், சுபாஷ் நகரை சேர்ந்தவர் சம்பத்(45). அங்குள்ள நூலகத்தில் தூய்மை பணியாளராக இருந்தார். இவரது மனைவி ரமாதேவி(38). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பத் கடந்த ஜூலை 29ம்தேதி அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சம்பத் மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சடலம் கிடந்த இடத்தில் இருந்த செல்போன் சிக்னல் மற்றும் அப்பகுதி மக்கள் அளித்த தகவல்களை ஆதாரமாக கொண்டு சம்பத் மனைவி ரமாதேவியிடம் போலீசார் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: ரமாதேவிக்கு கிசான் நகரைச் சேர்ந்த ராஜய்யா (50) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சம்பத், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் ரமாதேவி தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சம்பத் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் சம்பத், மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ரமாதேவி, தனது கள்ளக்காதலன் ராஜய்யாவிடம் கூறி சம்பத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜய்யா தனது உறவினரான னிவாஸ் (35) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். தங்கள் திட்டப்படி சம்பத்தை பொம்மக்கல் மேம்பாலத்திற்கு வரவழைத்து அங்கு மது குடிக்க வைத்துள்ளனர்.
சம்பத்துக்கு போதை தலைக்கேறிய பிறகு இருவரும், ரமாதேவிக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்த பின்னர், ராஜய்யாவும், நிவாசும் தாங்கள் கொண்டு வந்த விஷத்தை சம்பத்தின் காதில் ஊற்றியுள்ளனர். இதில் சம்பத் இறந்துள்ளார். அவர் இறந்தபிறகு தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டு 3 பேரும் தப்பிவிட்டனர். அதன்பிறகு ரமாதேவி, ராஜய்யா, நிவாஸ் ஆகிய மூவரும் சம்பத்தை தேடுவது போல் நாடகமாடியுள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை செய்ததை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.