கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி கைது
கோபி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் கள்ளக்காதலனுடன் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியண்ண உடையார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றபோது, ஓரிடத்தில் மண் மேடு இருப்பதும், நாய்கள் அங்கு துணியை இழுப்பதையும் கண்டு அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஆண் சடலம் புதைக்கப்பட்டு, நாய்கள் தோண்டியதால் தலை பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மண்ணை தோண்டி சடலத்தை வெளியே எடுத்தனர்.
அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பதும், புதைக்கப்பட்டு 4 அல்லது 5 நாட்கள் ஆகியிருப்பதும், உடல் முழுவதும் துணியால் சுற்றப்பட்ட நிலையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோபி ஏளூர் இந்திரா நகரை சேர்ந்த செல்வம் மகன் சின்ராஜ் (32) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான சின்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகி இருந்த நிலையில், சடலமாக புதைக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து சின்ராஜின் மனைவி அம்மாசையிடம் (30) போலீசார் நடத்திய விசாரணையில் தம்பி முறையான கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்து இருப்பது தெரியவந்தது. அத்தாசி அருகே உள்ள பெருமாபாளையத்தை சேர்ந்த அம்மாசைக்கும், சின்ராஜூக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், 10 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெருமாபாளையத்தில் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றபோது, அம்மாசைக்கும், அதே பகுதியை சேர்ந்த பெரியப்பா மகனான மாதேஷ் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்காதலாக மாறியது. இதையறிந்த சின்ராஜ், மனைவியை கண்டித்து வந்துள்ளார். கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரிந்துவிட்டதால், கணவனை கொலை செய்தால், மட்டுமே இருவரும் சந்தோஷமாக இருக்க முடியும் என கள்ளக்காதலனிடம் அம்மாசை கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்த சின்ராஜை இருவரும் கடப்பாரையால் தாக்கி கொலை செய்து சடலத்தை புதைத்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் சின்ராஜின் தாயார் குஞ்சம்மாள் என்கிற சதாமாரி (75) உடல்நிலை பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அம்மாசையுடன் மாதேசும் தங்கி இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது, கொலை செய்து சடலத்தை புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.