கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்ததை கண்டித்ததால் அடித்து கொன்றோம்: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
சேத்துப்பட்டு: லாரி டிரைவர் கொலையில் கைதான அவரது மனைவி, தனது கள்ளக்காதலனுடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஜாலியாக இருந்ததை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(27), லாரி டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா(25). இவர்களுக்கு 4 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர். விஜய்க்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், ஷர்மிளாவை சரமாரி தாக்கினாராம். இதையறிந்த ஷர்மிளாவின் தாயார் ராணிபாத்திமா விஜய்யை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக அக்கம்பக்கம் மற்றும் விஜய்யின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் விஜய்யின் சாவில் சந்தேகம் உள்ளதாக சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் ஷர்மிளா, ராணிபாத்திமாவிடம் நடத்திய விசாரணையில் விஜய்யை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
விஜய்யின் நண்பர் சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர். இவரும் லாரி டிரைவர். இவர் விஜய்யின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். இதனால் ஷர்மிளாவுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. விஜய் வீட்டில் இல்லாதபோதும் அவரது வீட்டுக்கு வாலிபர் வருவாராம். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். மேலும் ரீல்ஸ்கள் மற்றும் போட்டோவை எடுத்துள்ளனர். இதை ஷர்மிளா இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்த விஜய், ஷர்மிளாவை கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டையாலும், கம்பியாலும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் தூக்குபோட்டு கொண்டதாக நாடகமாடியுள்ளனர். ஷர்மிளாவுக்கு மேலும் பலரிடம் தகாத உறவு உள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், கைதான இருவரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்றிரவு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.