ஜனநாயகப் போரில் நம் கொள்கைப் படை நிச்சயமாக வென்று காட்டும்!’ திராவிடம் 2.0 ஏன்? நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!
சென்னை: ஜனநாயகப் போரில் நம் கொள்கைப் படை நிச்சயமாக வென்று காட்டும் என திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? என்ற நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை, சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஊடகவியலாளர் `தமிழ் கேள்வி’ செந்தில்வேல் எழுதிய, சீதை பதிப்பகம் வெளியீடான, திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூலினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட, காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பாசிஸ்டுகளுக்கு எதிராக நம்முடைய கழக உடன்பிறப்புகள் ஒவ்வொரு ஊரிலும் போராடுவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் போராடுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகள் போராடுவார்கள். இந்த ஜனநாயகப் போரில் நம் கொள்கைப் படை நிச்சயமாக வென்று காட்டும்’’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சிமிக்க உரையின் விவரம் வருமாறு: நண்பர் தமிழ்க்கேள்வி செந்தில்வேல் எழுதியுள்ள திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று, நூலை வெளியிட்டு, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிறப்பான வாய்ப்பை அளித்த தமிழ்க்கேள்வி செந்தில்வேலுக்கு முதலில் எனது நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பான நிகழ்ச்சி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே அரங்கில் ஆழிப் பதிப்பகத்தின் தேர்தல் - 2024, மீளும் மக்களாட்சி’ நூலை வெளியிட்டு, உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அதேபோல் இந்த ஆண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?’ என்ற புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இன்னும் பொருத்தமாகக் சொல்ல வேண்டுமென்றால், நீதிக்கட்சி தொடங்கப்பட்ட அதே நாள் நவம்பர் 20 அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் என் பெயரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பெயரும், அண்ணன் செல்வப்பெருந்தகை பெயரும் இடம்பெற்றிருந்தது.
நானும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உள்ளே வரும்போது, அண்ணன் செல்வப்பெருந்தகை இல்லை. முன்பே வந்துவிட்டு, அவசர வேலையாக வெளியே சென்று, அதன்பிறகு வந்துவிட்டார். அதற்குள்ளாக ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கடைசிவரை இவர் வரமாட்டார் போல என்று, இவர் வருவாரா? மாட்டாரா?’ என்று பத்திரிகை நண்பர்கள் எல்லாம் உதயநிதி அப்செட், செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்’என்று தலைப்புகள் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்கள். அண்ணன் செல்வப்பெருந்தகையும், அவரின் பேரியக்கமும் எங்கு வரவேண்டுமோ சரியான நேரத்தில் வருவார்கள். சென்றால்தானே வர முடியும்! இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையிலேயே எனக்கு கூடுதல் பெருமை.
ஒரு கொள்கை நூறு வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கிறது என்றால், அது எப்படிப்பட்ட கொள்கையாக இருக்கும் என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். கொள்கை மட்டுமல்ல; இந்த இயக்கமும், நூறு வருடங்களாக மக்கள் செல்வாக்குள்ள இரும்புக் கோட்டையாக நம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், திகழ்ந்துகொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட இந்த இரும்புக் கோட்டையில் எப்படியாவது ஒரு சிறிய விரிசல் ஏற்பட்டுவிடாதா என்று சங்கிகள் இன்றைக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இன்னும் அதிகமாகப் பதற வைக்கின்ற ஒரு புத்தகம்தான் செந்தில்வேல் எழுதியுள்ள திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?’ என்ற புத்தகம்.
நானும் ஒரு பதிப்பாளர்
நான் இந்தக் புத்தக வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சராக மட்டுமல்ல, கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக மட்டுமல்ல, நானும் ஒரு பதிப்பாளர் என்ற முறையிலும் கலந்து கொண்டுள்ளேன். இளைஞர் அணி சார்பாகச் சென்ற ஆண்டு முத்தமிழறிஞர் பதிப்பகத்தைத் தொடங்கினோம். பல புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத் திருவிழா’ என்று மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம். அந்த நிகழ்ச்சி 9 நாட்கள் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புத்தகக் காட்சியும், 11 அமர்வுகளில் 44 சிறந்த பேச்சாளர்கள் அவர்களின் கருத்துகளை முன்வைத்த உரைகளும் இடம்பெற்றன. எனவே, நானும் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.அந்த விழாவில் காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு’ என்ற நூலை நாங்கள் வெளியிட்டோம். புத்தகக் காட்சியும் நடைபெற்றது. ஏராளமான அரசியல் புத்தகங்களும் அதில் இடம்பெற்றன. அதற்குக் காரணமாக இருந்தது முத்தமிழறிஞர் பதிப்பகம். சீதை பதிப்பகத்தாருக்கு இந்த நேரத்தில் எனது பாராட்டுக்கள், வாழ்த்துகள். ஏனென்றால், நான் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது சீதை பதிப்பகத்தாரர்கள்தான்.
திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ என்ற புத்தகத்தை நான் வெளியிட, அண்ணன் சுப.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார்கள். இப்போது கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு, சீதை பதிப்பகத்தார் வெளியிடுகின்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்குப் பெருமை. இந்த நூலுக்கு நம்முடைய தலைவர் அணிந்துரை எழுதியுள்ளார்கள். "2026 தேர்தல் களத்தில் நம் கழகத்தினருக்குப் போர் வாளாகவும், கேடயமாகவும் இந்த நூல் நிச்சயமாகப் பயன்படும்" என்று புகழ்ந்து நம் தலைவர் எழுதியுள்ளார். அது நூற்றுக்கு நூறு உண்மை. செந்தில்வேல் திராவிடத்தைக் காக்கின்ற வேலாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தொலைக்காட்சி விவாதங்களில் மற்றவர்களை அவர் எப்படி ஓடவிடுகிறார். அவர் பேசியது மட்டுமல்ல, அதை விளம்பரமாகவும் இங்கு ஒளிபரப்பினார்கள்.
ஒரு சேனலில் அவர் மட்டும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தச் சங்கிகள் பார்த்த வேலையால், தினசரி நான்கு, ஐந்து தொலைக்காட்சிகளில் சங்கிகள் ஒவ்வொருவரையும் வெளுத்து வாங்குகிறார். அதுமட்டுமல்லாமல், இப்போது தனியாக யூடியூப் சேனல்களையும் நடத்துகிறார். அவரின் தமிழ்க்கேள்வி சேனலில் கூட இன்றைக்கு ஒவ்வொரு நாளும் வேல்வீச்சு’ என்ற தலைப்பில் தொடர்ந்து காணொலிகளைப் பதிவு செய்து, அதையும் வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்.
செய்தி தொலைக்காட்சிகள்
இது மட்டுமல்லாமல், உங்களில் பலருக்குத் தெரிந்த விஷயம். நான் இன்றைக்குக் கேள்விப்பட்ட விஷயம். இன்றைக்கு நம்முடைய செய்தி தொலைக்காட்சிகளில் விவாத மேடை நிகழ்ச்சிகள் நடத்தினால், அடிமைகளும் சங்கிகளும் முதலில் கேட்கின்ற கேள்வி, தி.மு.க சார்பாக யார் வருகிறார்கள்?’ என்பது முதல் கேள்வி; இரண்டாவது கேள்வி, தமிழ்க்கேள்வி செந்தில்வேலும் வருகிறாரா?’ என்பதையும் கேட்கிறார்களாம்.சிலர், செந்தில்வேலின் பெயர் சொன்னால், எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது, வேறு தொலைக்காட்சிக்குப் போகிறோம்’’ என்று சென்றுவிடுகிறார்களாம். ஒரு பக்கம் இப்படி அவர் செய்துகொண்டு இருக்கிறார் என்றால், இன்னொரு பக்கம், இன்னொரு செய்தியும் வந்தது.
அதில் சில சங்கிகளும், அடிமைகளும் செந்தில்வேல் அலைபேசியில் தொடர்புகொண்டு, ஒரு வேண்டுகோள் வைக்கிறார்களாம். சார், இன்றைக்கு இந்தத் தொலைக்காட்சியில் விவாதத்துக்கு வருகிறீர்களாமே, நாங்களும் அந்த விவாதத்துக்கு வருகிறோம். ஒரேயொரு வேண்டுகோள். பேசும்போது கொஞ்சம் பொறுமையாகப் பேசுங்கள், பார்த்துப் பேசுங்கள். எங்களை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள், ஆனால் எங்கள் ஜி-யையும் எங்கள் நிரந்தரப் பொதுச் செயலாளரையும் தயவு செய்து திட்டாதீர்கள். அவர்களால் அதைத் தாங்க முடியாது" என்று அவரிடம் நேராகவே வேண்டுகோள் வைக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.
தொலைக்காட்சி விவாதங்கள் மட்டும் இல்லாமல், இன்றைக்கு மேடைப் பேச்சு, பட்டிமன்றங்கள், மக்கள் மன்றம் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கக் கூடியவர்தான் செந்தில்வேல். இன்றைக்கு அவர் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக் கொள்வோம். அவரின் அந்தத் தீவிரக் கொள்கையின் காரணமாகத்தான் இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களுக்கு அவரைத் தொடர்ந்து நாங்கள் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அதேபோல் இளைஞர் அணியின் சார்பாக, சென்ற வருடம் கலைஞரின் நூற்றாண்டுக்காக நம் தலைவர் , தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டி நடத்தி, 100 இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள்.
அதில் நடுவர்கள் குழுவில் செந்தில்வேலும் இடம் பெற்று, இன்றைக்கு 200 சிறந்த இளம் பேச்சாளர்களை அவர் கண்டெடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த நூலில் உள்ள முதல் கட்டுரையின் தலைப்பே தமிழ்நாட்டின் வழிகாட்டி, இந்தியாவின் திசை காட்டி’ என்று நம் கழகத் தலைவர் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இன்றைக்கு நம் கழகத் தலைவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லை; பா.ஜ.க-வை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக நம்முடைய கழகத் தலைவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல், திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் இன்றைக்கு இந்தியாவிலேயே முன்மாதிரித் திட்டங்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
உதாரணத்திற்கு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். முதலமைச்சர் ஒரு ஆய்வுக்காக ஒரு பள்ளிக்கூடத்திற்குப் போகிறார். அங்கு ஒரு குழந்தை சோர்வாக நின்று கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவனிடம் முதலமைச்சர் என்ன தம்பி, என்ன ஆச்சு?’’ என்று கேட்கிறார். அந்தப் பையன் சொல்கிறான். ஐயா நான் காலையில் இருந்து சாப்பிடவில்லை, பசியில் இருக்கிறேன்’’ என்று. அந்தப் பையன் சொன்னவுடன் நம்முடைய முதலமைச்சர் உத்தரவு போடுகிறார். இனிமேல் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். காலையில் வந்தவுடன் முதலில் தரமான உணவு, அதன் பிறகு தரமான கல்வி."
அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காகப் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் வந்து பாராட்டினார். அவர் நம்முடைய கூட்டணிக் கட்சி கிடையாது. ஆம் ஆத்மி இயக்கத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவன் சிங் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். அந்தக் குழந்தைகளிடம் எல்லாம் பேசிவிட்டு, வாழ்த்தினார்.
முதலமைச்சர் , இது மிகச்சிறந்த திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அடுத்த ஆண்டிலிருந்து நானும் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன்’’ என்று சொன்னார் அந்த முதலமைச்சர் .
கல்வி ஊக்கத்தொகை
தமிழ் புதல்வன் திட்டம்", "புதுமைப் பெண் திட்டம்". குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் இது. அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்வி படிக்க எந்தக் கல்லூரிக்குச் சென்றாலும், கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 நம்முடைய அரசு வழங்கும் என்று சொல்லி வழங்கிக்கொண்டு இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் . அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு, தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வந்தார். அவர் பாராட்டிப் பேசும்போது நிச்சயம் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து இந்தத் திட்டத்தைத் தெலங்கானா மாநிலத்திலும் தமிழ்நாடு போலவே நானும் அறிமுகப்படுத்தப் போகிறேன்’’என்றார்.
பா.ஜ.க அரசின் முகத்திரை
இப்படி மற்ற மாநில முதலமைச்சர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய முதலமைச்சர் . இப்படி எல்லாத் திட்டங்களும் மக்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்று ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். புள்ளி விவரத்துடன், ஆதாரத்துடன், யாருமே மறுக்க முடியாத ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பாசிச பா.ஜ.க அரசின் முகத்திரையைக் கிழிக்கின்ற கட்டுரைகளை மிகவும் அழகாக, ஆழமாக எழுதியிருக்கிறார். மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தை எப்படிச் சீரழித்திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு எப்படி எல்லாம் கோட்டை விட்டுள்ளது என்பதையும் ஒரு தனி கட்டுரையாகவே எழுதியிருக்கிறார்.
உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரைக்கும் இந்த நூல் பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் செந்தில்வேல் தொலைநோக்கோடு பல கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஒரு கட்டுரையின் தலைப்பு, `தேர்தலும் பா.ஜ.க-வின் தில்லுமுல்லும்’. இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. இதை அவர் எழுதியது 2024 ஆம் ஆண்டு முரசொலியில் வந்திருக்கிறது. அதில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த எஸ்.ஐ.ஆர் சூழ்ச்சியின் தொடக்கப் புள்ளியை அவர் 2024-இல் முரசொலியில் எழுதி இருக்கிறார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நியமனம் பற்றி அதில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
ஞானேஷ்குமார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக வருவதற்கு முன் என்னவாக இருந்திருக்கிறார்? ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பொறுப்பில் இருந்த கூட்டுறவு அமைச்சகத்தின் ஒரு செயலாளராக இருந்திருக்கிறார். ஞானேஷ் குமார் . இன்றைக்கு அவரின் தலைமையில் தேர்தல் ஆணையம் செய்கின்ற சதிகளையும், சூழ்ச்சிகளையும் இன்றைக்கு ஒட்டுமொத்த நாடும் குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. ஆனால், இன்றைக்கு அது பா.ஜ.க-வின் கைப்பாவையாக ஒட்டுமொத்தமாக மாறி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த கட்டுரையில் செந்தில்வேல் எழுதியிருக்கிறார்: மோடியின் ஆட்சியில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை என்று ஜனநாயகத்தின் அனைத்து முகமைகளையும் பா.ஜ.க-வின் ஒரு அங்கமாகப் பிரிவு போலச் செயல்படத் தொடங்கியதை நாம் அறிவோம். அந்த குற்றச்சாட்டுக்குத் தேர்தல் ஆணையமும் உள்ளாவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஒரு பேராபத்து" என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொன்ன அந்தப் பேராபத்தால், இன்றைக்கு இந்த நாடே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர் மூலமாகப் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் நீக்க முயற்சி எடுக்கிறார்கள். பீகாரில் அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
என்ன சொல்கிறார்?
குறிப்பாக, சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளை எல்லாம் நீக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மோசடியை எதிர்த்துதான் இன்றைக்கு நம் கழக உடன்பிறப்புகள் நீங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களுக்காக, அவர்களின் ஓட்டுரிமைக்காக, நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இங்கு இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்? எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஏனென்று கேட்டால், "தி.மு.க எதிர்க்கிறது, அதனால் நாங்கள் ஆதரிக்கிறோம்" என்கிறார். உச்ச நீதிமன்றத்தில் அதற்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பா.ஜ.க-வுக்கு இன்றைக்கு நாடு முழுவதும், பல மாநிலங்களில் அடிமைகள் வாய்க்கலாம். ஆனால், நம் ஊரில் இருக்கிற அ.தி.மு.க. அடிமைகள் மாதிரி ஒரு கடைந்தெடுத்த அடிமைகள் அவர்களுக்கு எந்த மாநிலத்திலும் சிக்க மாட்டார்கள். அதனால்தான் பா.ஜ.க-வின் நம்பர் ஒன் அடிமைகள் அவர்கள்தான் என்று நிரூபிக்க, எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு ஒரு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு சின்னக் கதையை, ஒரு உதாரணத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு திருடன் பிக்பாக்கெட் அடித்துவிடுகிறான். பணத்தைப் பறிகொடுத்தவன், "ஐயோ திருடன்! திருடன்!" என்று கத்துகிறான். உடனே கொஞ்சம் பேர் அந்தத் திருடனைப் பிடிப்பதற்கு ஒரு பக்கம் ஓடுவார்கள். அந்தக் கூட்டத்தில் திருடனே, இன்னொரு திருடனைச் செட் பண்ணி, வேடிக்கை பார்க்கிற மாதிரி செட் பண்ணி வைத்திருப்பான். அந்தத் திருடன் எல்லாரையும் திசை திருப்ப வேண்டும் என்று "திருடன் இந்தப் பக்கம் ஓடினான்" என்று எல்லாரையும் திசை மாற்றுவான். மக்களைத் திருப்பி விடுவான். இதனால் அந்தத் திருடன் தப்பித்துச் செல்வதற்கு அவன் வழி வகுத்துக் கொடுப்பான். அந்த மாதிரிதான் இன்றைக்கு மக்களைத் திசை திருப்ப, வாக்குகளைத் திருடுபவர்களை எல்லாம் தப்பிக்க வைக்கிற வேலையை இந்த அடிமைக் கூட்டம் செய்துகொண்டு இருக்கிறது. நான் சொன்ன முதல் திருடன் அ.தி.மு.க. இரண்டாவது திருடன் பா.ஜ.க தலைமையில் இயங்குகின்ற தேர்தல் ஆணையம்.
மோடி மஸ்தான் வேலைகள்
இந்த நூலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்டுரையும் எதிரிகளின் ஆயுதங்களைப் பிடுங்கி அவர்களையே தாக்குற மாதிரி சிறப்பாக எழுதியிருக்கிறார் செந்தில்வேல். இன்னொரு கட்டுரைக்கு "இது தமிழ்நாடு, மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் இங்கு செல்லாது" என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் மிக முக்கியமான ஒரு தகவலை செந்தில்வேல் சொல்லி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து அங்கு பேசும்போது, "சோழ மன்னர்களுக்கு ஒன்றிய அரசு சார்பாகச் சிலை வைப்போம்" என்று ஒரு கதை விட்டுவிட்டுச் சென்றார். ஆனால், அவர் அன்றைக்கு குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சென்று குஜராத் மியூசியத்தில் இப்போது வைக்கப்பட்டிருக்கக்கூடிய ராஜராஜசோழன் மற்றும் அவரின் மனைவியின் சிலைகளைத் தமிழ்நாடு அரசு திரும்பக் கேட்ட போது, தரமாட்டேன்’ என்று சொன்னவர்தான், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த மோடி.
மக்களவைத் தேர்தலின்போது கிட்டத்தட்ட எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குக் கொடுத்தது வெறும் ஒரே ஒரு முட்டைதான். இப்போது மீண்டும் மோடி சட்டமன்றத் தேர்தல் வருவதால், வர ஆரம்பித்திருக்கிறார். இனி அடிக்கடி வருவார். நேற்று கோயம்புத்தூருக்கு வந்துவிட்டுச் சென்றார். கோயம்புத்தூருக்கு வந்துவிட்டு, கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தர முடியாது’ என்று சொல்லவிட்டுச் செல்லத்தான் ஒரு பிரதமர் வந்துவிட்டுச் சென்றுள்ளார்.அனுமதி மறுக்கக் காரணம் என்ன சொல்கிறார்கள்? மக்கள் தொகை குறைவாக இருக்கிறதாம். மதுரையிலும், கோயம்புத்தூரிலும் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தை ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறது.
பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய ஆக்ரா மற்றும் கான்பூருக்கு மட்டும் மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சொன்னபோது, அதைச் சரியாகப் பின்பற்றிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. அதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்திய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. சொன்னதைக் கேட்டது தமிழ்நாட்டு மக்கள். இன்றைக்கு அதையே காரணம் காட்டி மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி தரமாட்டேன் என்று சொல்கிறார்கள்.
தொகுதி மறுவரையறை
அதுமட்டுமல்ல; மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், இன்றைக்குத் தொகுதி மறுவரையறை என்று சொல்லி நம்முடைய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்கின்ற முயற்சியிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டிருக்கிறது. நேற்று பிரதமர் மோடி பேசும்போது, "என்னால் தமிழ் படிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தி மோடி பேசி இருக்கிறார்." நான் அவரைப் பார்த்து கேட்கிறேன். ஒரு பக்கம் தமிழ் மேல் அக்கறை இருக்கிற மாதிரி நாடகம் போடும் நீங்கள், இன்னொரு பக்கம் நம்முடைய பிள்ளைகள் தமிழ் படிக்கக் கூடாது என்று இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி செய்கிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயம்? மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதிப் பகிர்வாக 2,500 கோடி ரூபாயைத் தருவேன் என்று சொன்னீர்களே, இது எந்தவிதத்தில் நியாயம்? "தமிழ் படிக்காமல் போய்விட்டதே" என்று கவலைப்படுற நீங்கள் தமிழின் வளர்ச்சிக்காகக் கடந்த 10 வருடத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?
தமிழ் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? தமிழ் வளர்ச்சிக்கு வெறும் 150 கோடி ரூபாய். ஆனால் செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? 2,400 கோடி ரூபாய். இதுதான் பிரதமர் மோடியின் தமிழ்ப் பாச நாடகம். இந்த அநியாயத்தை நாம் தட்டிக் கேட்க வேண்டும். இதற்குக் நம் கையில் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்புதான் 2026 சட்டமன்றத் தேர்தல். தேர்தலுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதம் கூட இல்லை. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூலை நிச்சயம் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய தகவல்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என்று சங்கிகள் எந்த அவதூறு பரப்பினாலும், அந்த அவதூறுகளை அடித்து நொறுக்க இந்த நூல் நிச்சயம் நமக்கு ஒரு துணையாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?’’ என்று இரண்டு கேள்விகள் இருக்கின்றன. அதற்கான சரியான பதில்களை செந்தில்வேல் அவர்களே இந்த புத்தகத்தில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க உரை
இந்த நேரத்தில் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஹிட்லரின் படைகள் ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கொண்டே வந்தார்கள். ஹிட்லரின் படை எப்போது வேண்டுமானாலும், இங்கிலாந்துக்குள் நுழையலாம் என்று அஞ்சினார்கள். அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிற மாதிரி ஒரு உரையை நிகழ்த்தினார். "We shall fight on the beaches, we shall never surrender" அதாவது, பாசிச சக்திகளை எதிர்த்து நாங்கள் கடற்கரையிலும் போராடுவோம், திறந்த வெளியிலும் போராடுவோம். ஊர்களிலும் தெருக்களிலும் போராடுவோம், நிலத்திலும் மலைகளிலும் போராடுவோம். போராடிக் கொண்டே இருப்போமே தவிர, ஒருபோதும் நிச்சயமாகச் சரணடைய மாட்டோம் என்று வின்ஸ்டன் சர்ச்சில் பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரையை இந்த மேடையில் நான் திரும்பச் சொல்கிறேன்.
பாசிஸ்டுகளுக்கு எதிராக நம்முடைய கழக உடன்பிறப்புகள் ஒவ்வொரு ஊரிலும் போராடுவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் போராடுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகள் போராடுவார்கள். இந்த ஜனநாயகப் போரில் நம் கொள்கைப் படை நிச்சயமாக வென்று காட்டும். தலைவர் சொன்னது மாதிரி குறைந்தது 200 தொகுதிகளில், நம்முடைய இந்தியா கூட்டணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வென்று நம்முடைய தலைவர் அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பார். அதற்கு நாம் அத்தனை பேரும் இன்றிலிருந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம். அனைவரும் சுலபமாகப் படிக்கக்கூடிய அளவில் இந்தப் புத்தகத்தை அவர் வடிவமைத்திருக்கிறார். அதனால் இந்தப் புத்தகத்தை இங்கு வந்திருக்கக்கூடிய அனைவரும் வாங்கி நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும், இல்லையென்றால் ஒரு பரிசாக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதைப் படித்து, அதில் இருக்கக்கூடிய கருத்துக்களை நீங்கள் பகிர வேண்டும் என்று நான்கேட்டுக்கொள்கிறேன். இங்கே செந்தில்வேல் என் பிறந்தநாளுக்குப் பரிசு கொடுத்துவிட்டு, "அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" என்று சொன்னார். அதற்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு மட்டும் பரிசு கொடுக்கவில்லை. ஒரு ஓவியம் இருந்தது. அதில் நானும் நண்பர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரி என்னுடைய பிறந்தநாள் நவம்பர் 27, அதன்பிறகு சரியாக ஐந்து நாட்களில் அவரின் பிறந்தநாளும் வந்துவிடும் டிசம்பர் 2. அதனால் இரண்டு பேருக்கும் சேர்ந்து அவர் வாழ்த்துகள் சொல்லி, பரிசு கொடுத்திருக்கிறார். எனவே இருவரின் சார்பாகவும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அருமையான புத்தகத்தை வெளியிட்டுள்ள செந்தில்வேலுவின் எழுத்துப் பணியும் தொடர வேண்டும், அவரின் பேச்சுப் பணியும் தொடர வேண்டும் என்று சொல்லி, "வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு" என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சிமிக்க உரையாற்றினார்.
பங்கேற்றவர்கள்
அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் பேரியக்க மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, மாவட்டக் கழகச் செயலாளர் சிற்றரசு, ஜெ.கருணாநிதி, மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் பரந்தாமன், கழகச் செய்தித் தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், அயலக அணி மாநிலச் செயலாளர் அப்துல்லா, மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் பேராசிரியர் தீபக், பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள் அக்ரி கணேசன், வி.பி.மணி, கோவி.லெனின், இயக்குனர் போஸ் வெங்கட், வி.கே.பாபு, சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ஜாகீர் உசேன், எழுத்தாளர் இமையம், பத்திரிகையாளர் விஜயசங்கர், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி, பகுதிக் கழகச் செயலாளர்கள் ஏழுமலை, ஹாஜா கனி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், பதிப்பாளர் கௌரா ராஜசேகர், ஜெய்கணேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உமாசங்கர், தினேஷ், விக்னேஷ், டேன் டீ பிரகாஷ், அஸ்வின், மணிரத்தினம், ராஜா தமிழ்மாறன், வட்டக் கழகச் செயலாளர்கள் ஜெயக்குமார், லோகு, மாரி, பேராசிரியர் மாரப்பன், அயன் கார்த்திகேயன், அயலகத் தமிழர் நல வாரியத்தின் உறுப்பினர் துபாய் மீரான், நூலாசிரியர் தமிழ்க்கேள்வி செந்தில்வேல், மற்றும் அவரின் மகள்கள் தர்ஷிணி, நிறை நிலா உள்பட பலரும் கலந்துகொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.