வெள்ளை மாளிகையில் ஐடி நிறுவனங்களின் சிஇஓக்களுக்கு விருந்தளித்த அதிபர் டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்து கவுரவித்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா, ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அதிபர் டிரம்ப், முதல் அமெரிக்க பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் இதில் பங்கேற்று சிஇஓக்களை வரவேற்றனர். தொழில்நுட்பத் துறையில் அவர்களின் பங்களிப்பு மற்றும் திறமைகளை பாராட்டினார். அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘இந்த குழுவினருடன் இங்கு இருப்பது ஒரு மரியாதை. அவர்கள் வணிகத்திலும், மேதமையிலும் மற்ற அனைத்து பணிகளிலும் ஒரு புரட்சியை வழிநடத்துகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய சுந்தர்பிச்சை, அதிபர் டிரம்ப் நிர்வாகம் செயற்கை நுண்ணறியவில் நிறைய முதலீடு செய்து வருகின்றது. ஜூலை மாதம் மாளிகையால் வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயல் திட்டம் ஒரு சிறந்த தொடக்கம். நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறோம். உங்கள் தலைமைக்கு நன்றி” என்றார். தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற சிஇஓக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.