வாட்ஸ் அப் , டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - தொலைத்தொடர்பு துறை அதிரடி
புதுடெல்லி: வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த சிம்கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப், சிக்னல், பேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், அரட்டை, ஜியோ சேட், ஸ்னாப்சேட், சேர் சாட் உள்ளிட்ட பல சமூக வலைதள செயலிகளை பயன்பாட்டில் உள்ளன. இவற்றை செல்போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம். இதன் பிறகு, சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயல் இழந்தாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். இணையத்தின் உதவியுடன் அவற்றை பயன்படுத்தலாம். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் இனி மொபைல் போனில் ஆக்டிவ் சிம்கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும் என்றும் சிம்கார்டு இல்லை என்றால் சமூக வலைத்தள செயலிகள் தானாகவே செயலிழந்துவிடும் என்றும் ஒன்றிய தொலைத்தொடர்பு துறை புதிய விதிகளை வகுத்துள்ளது. இந்த புதிய விதியை 90 நாட்களுக்குள் அமல்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல மொபைல் போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் கணினியில் இணையதளம் வாயிலாக இந்த செயலிகளை பயன்படுத்தினால், பாதுகாப்பு கருதி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக் அவுட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்த, கியு ஆர் குறியீடு வாயிலாக இணைத்துக் கொள்ளும் வசதியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.